Monday, May 07, 2007

மூன்றாவது கொம்பு


சில சந்தோச தலைக்கண தருணங்களில்
சந்தேகமில்லாமல் உணருகின்றேன்!
தலையில் முளைக்கும் அந்த இரு கொம்புகளை,
அபூர்வமாய் மூன்றாகவும்!

பலரின் கைகள் முயலுகின்றன உடைப்பதற்கு
ஆயுதமாக வார்த்தைகளாலும்,வாத்தியங்களாலும்,
கூர்ந்து பார்த்தால் என் பின்னந்தலையிலிருந்தும்
இருகைகள் கிளம்பி கொம்பின் மேல் ஆயத்தமாக!

கைகளைப் பார்த்து வேதனையான நடிப்புடன்
கை கொட்டிச் சிரிப்பதற்கு அதிகநேரம் முடியவில்லை!
தயவுசெய்து உடைத்தெரியுங்கள் தாங்கிக்கொள்கிறேன்,

அவைகளை உள்ளே அழுத்தி காணாமல்
போக்க வேண்டுமென்ற
உங்களின் முயற்சியை விட்டுவிடுங்களேன்!
அனுபவிப்பவனுக்கு மட்டுமே வேதனைகள்!

அன்புடன்...
சரவணன்.

Friday, May 04, 2007

சென்னைப்பதிவர்கள் சந்திப்பில் - விடுபட்டவை சுவாரஸ்யத்துடன் - நிறைவுப் பகுதி

சந்திப்பு பற்றிய முதல் பகுதிக்குச் செல்ல இங்கே கிளிக்கவும்!

பார்க்கிலிருந்து வெளிவந்த போது பதிவர்களின் எண்ணிக்கை 20 தாக இருந்தது.சந்திப்பிற்கு வந்த பதிவர்களில் குறிப்பிட்டுச் சொல்லப் படவேண்டியவர் திரு.வினையூக்கி அவர்கள்,வந்த பதிவர்களில் மிகவும் உற்சாகத்துடன் காணப்பட்டவர் இவரே!அவரிடம் சிறிது நேரம் பேசினேன் அப்பொழுது தங்களைப் பார்த்தால் மானுஷ்யபுத்திரன் நினைவுக்கு வருகிறார்,தாங்களும் அவர்போல் நிறைய எழுதி பெயர் பெற வேண்டுமென்றேன், அதற்கு மானுஷ்யபுத்திரன் அளவிற்க்கு முடியாவிட்டாலும் என்னால் இயன்ற அளவிறக்கு முயல்வேன் என்றார்.

எங்கநேரம் வெளியிலிருந்த பொட்"டீ"க்கடையில் டீ இல்லை! சரி என்று சிலர் ஜீஸும், சிலர் மோரும் குடித்தோம்! (ஸ்பான்சர் யார் என்று இதுவரை தெரியவில்லை! அனேகமாக மொட்டையாக இருக்கலாம்,யாரோ அவருக்கு ஒரு நன்றி!)அப்பொழுது சிறில்அலெக்ஸ் மோர் குடிக்கும் நேரமா இது? என்று தனது பீர் தாகத்தை நினைவுப் படுத்தினார்.பொன்ஸ் அக்கா என் அருகில் வந்து இந்த பதிவர் சந்திப்பு கண்ணைக்கட்டி காட்டில் விட்டது(நாகர்கோவில் சந்திப்பு)மாதிரி இல்லையே? என்றார், நானும் இல்லை,நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன் என்றேன். பின் அனைவருக்கும் எள்ளுருண்டை கொடுத்தார்.உடனே நமது "கலாய்த்தல்"சிபி, இது சாப்பிடுவதற்கு அல்ல மொட்டையில் அடிப்பதற்கு பாகச மகளிரணியால் வழங்கப்படுகிறது என்றதும் அனைவரும் சிரிக்க! அப்பாவியாய் பாலபாரதி மொட்டையில் கைவைத்து மறைத்துக் கொண்டார்! பாஸ்டன்பாலா இரவே பாஸ்டன் கிளம்பவேண்டி இருப்பதால் அனைவரிடமும் விடை பெற்றார்.

மகரிஷியை பார்த்தாயிற்று வாருங்கள் மகிரிஷி தீர்த்தம் குடிக்க என்று சிபியார் வேண்டுகோள் வைக்க! அதற்காகத் தானே காத்திருந்தோம் என்று பார்போற்றும் பதிவர்கள் அடுத்து சென்றது பார் நோக்கி!

பதிவர்கள் கிடைத்த வாகனத்தில் தொற்றிக் கொள்ள ஓகையாரின் கார் எங்களுக்குக் கிடைத்தது! காரின் முன்னிருக்கையில் ஓகை, வரவணைசெந்தில், பின்னிருக்கைகளில் இடதுபுறம் சிபி, வலதுபுறம் ஓசைசெல்லா நடுவில் நான்! கார் சென்னை போக்குவதத்தில் போதை(?)யில் போவதுபோல் மிதந்து சென்றது,

காரில் செல்லும் போது நடந்த உரையாடல்,

வரவணை:-செல்லா, உங்களின் பதிவுகளைப் பெண்கள் அதிகம் படிக்கின்றனர்,(இது இவருக்கு எப்படித் தெரியும்?), நன்றாக இருக்கின்றதாம்,என் நண்பர்(பெண் நண்பியாக இருக்கலாம்) செல்லமாக உங்கள் தலையில் குட்டச் சொன்னார் என்றார்(பாலபாரதி நமது நண்பர் வரவணையின் குட்டை உடைக்கவும், இல்லையேல் உம்ம மண்டை உடையும்).

சிபி:- ஓகை தாங்கள் பேராசிரியரா?
ஓகை:- இல்லை! ஏன்?
சிபி:-தங்களின் ஒருபதிவில்,பதிவில் உடன்பாடில்லை என்றும் எதிர்மறையாகவும் பின்னூட்டமிட்டிருந்தேன், அதற்கு ஒருபதிவர், அவர்(ஓகை)பேராசிரியர் போன்று தோன்றுகிறது,கவனம் என்று கூறியிருந்தார்,அதான் கேட்டேன்.
ஓசை செல்லா: ஏன் ஓகை பேராசிரியராக இருந்தால் எதிர்மரைப் பின்னூட்டம் போடக் கூடாதா? யாருடைய பதிவில் நமக்கு உடன்பாடில்லையோ அதில் எதிர்த்து பின்னூடமிடுவது தவறில்லை,அது ஓகையாக இருந்தாலும் விதிவிலக்கில்லை!

(நாங்கள் சென்றது ஓகையின் காரில்!)

பின் நான் சிபியிடன் இந்த எலிக்குட்டி சோதனை என்றால் என்ன? என்றேன்.அதற்கு அவர் அதைப் பற்றி சிறிது விளக்கினார், பின் எலிக்குட்டி பற்றி திரு.டோண்டு அவர்களுக்குத்தான் நன்றாக தெரியும், நம்பர் தருகிறேன் பேசுறியா? என்றார். நான் உடனே, எலிவாலைப் பற்றிக் கேட்டால் நீர் புலிவாலை புடிக்கச் செல்லுகின்றீரே என்றேன்.(டோண்டு கோச்சுக்காதீங்க சும்மா டமாசு!)

இப்படியாக ஓகையின் கார் ஒரு பாரின் முன் நின்றது. அங்கு முன்னமே குடிமகன்களால் நிரம்பிவழிய, மற்றவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்று தெரியாத நிலையில் (நம்மை விட்டு போயிட்டாங்களோனு வருத்தம் எனக்கு) தருமிக்கு கைத்தொலைபேசினார் வரவணை, பின் "ஓகையின்"கார் EAGLE பார் நோக்கி பறந்தது! ஓகையின் வீடு அருகிலேயே இருப்பதால் காரை வீட்டிலேயே பார்க் செய்துவிட்டு வந்து விடுவதாக அப்"போதை"க்கு எங்களை EAGLE-ன் முன் இறக்கிவிட்டுச் சென்றார்,அங்கு நமது பதிவர்கள் காத்திருந்தனர்,அங்கும் தரைத்தளம் நிரம்பியிருந்தது! எனவே எங்களை அடுத்த(இரண்டாவது) தளத்திற்க்கு போகச் சொன்னார்கள்!(சந்திப்பில் பதிவுகளை அடுத்த தளத்திற்கு கொண்டுசெல்லவேண்டுமென்ற கேரிக்கை நினைவில் வந்துபோனது! பதிவு போகாவிட்டால் என்ன,பதிவர்களாவது போவோம்!)படியில் ஏறுவது சிரமமாக இருந்தது உடனே ஒரு அனானி கமெண்டு:- ஹிம்!இன்னும் தண்ணீயே அடிக்கலை,அதுக்குள்ள தலை சுத்துதே என்று!

படியில் ஏறும் போது கருப்புநிற தேனீர்ச்சட்டை அணிந்திருந்த இளைஞர் தருமி என்னிடம் எங்கிருந்து வருகிறேன், தொழில் பற்றி விசாரித்தார்.சுதந்திரமாக விவாதிப்பதற்கு ஏற்றாற்போல் இரண்டாவது தளத்தில் வேறு யாருமில்லை! வட்டமாக அமர்ந்தோம்!நான் , எனது இருபுறமும் சிபி மற்றும் "7அப் புகழ் "லக்கி, ஏனையோர் ரோஜா வசந்த்,ஓகை, ஓசை செல்லா,சிரில்,மற்றும் பெயர் மறந்த இருவர். மற்றவர்கள் எல்லாம் ஹாட்டாக அடிக்க என்னுடன் சேர்ந்து பியர் அடித்த பியரர் திரு.ரோசவசந்த், சிக்கன், மட்டன், மீன் மற்றும் சில வெஜிடேரியன் ஐட்டங்களும் வந்தன, சிறிது நேரத்தில் களை கட்டியது அந்தத் தளம்,

ஆரம்பம் மங்களகரமாக இருக்கவேண்டும் என்பதாலோ என்னவோ பேச்சு சிம்ரன் ஆப்பக்கடை, நமீதா ரசிகர் மன்றம் என்று போனது, சிபி உடனே தருமியிடன் உங்களுக்கும் இவர்கள் தானா? என்று வம்பிழுத்தார்.அதற்கு தருமி இவர்களில்லை....... என்று இழுத்து சிரித்தார், பின்ன யாரு ? என்று கேட்டதற்கு, அசின் தான் தனக்குப் பிடிக்கும் என்று தனது இளமையை நிருபித்தார்.சிறிது நேரத்தில் இரண்டாவது தளம் விவாதக் களம் ஆனது.சீரியஸான விவாதங்கள், இங்கும் நாகரீகமாகவே!

லக்கி தண்ணீ அடிக்காததால் நான்-வெஜ் அவரிடமிருந்து தள்ளியே இருந்ததை மற்றவர்கள் "தள்ளி"க் கொண்டிருந்தனர் , நான் சில ஃபீஸ்களை எடுத்துக் கொடுத்தேன், அவ்வளவு நேரம் சீராக இருந்த சிபியார் ஒரு லார்ஜ் போனதும் சேஷ்டைகளை ஆரம்பித்தார். அதாவது ஒருகாலத்தில் தான் புறாவிற்கு கறி கொடுத்ததாகவும்,எனவே தனக்கு தற்பொழுது புறாவின் கறி வேண்டுமென்றும் "பறக்க" ஆரம்பிததார். அவரை சமாதானம்"படுத்த" சிறிது நேரமானது! சிபி எத்தனை சிகரெட் அடித்தார் என்ற கணக்கெல்லம் நமக்கெதுக்கு அதை மறக்கும்படியும் சொல்லிவிட்டார்.கையில் வைத்திருந்த ஒரு முழு பாக்கெட் காலிபண்ணிவிட்டு அடுத்த பாக்கெட் ஆர்டர் பண்ணியது மட்டுமே நினைவில். பதிவர்களின் பேச்சு இடஒதுக்கீடு,ஆரிய-திராவிட ஆத்திக-நாத்திகம் பக்கம் போனது, நானும் சிபியும் இரண்டுபக்கமும் கலாய்த்தல் கமெண்டுகள் மட்டும் போட்டு விட்டு சிரித்துக் கொண்டிருந்தோம்! அருகில் இருந்த லக்கியாரை திடீரென காணவில்லை! எங்கே?என்று பார்த்தால் ஓகைக்கும்,ஓசைசெல்லாவுக்கும் நடுவில் போய் கன்னத்தில் கை வைத்தபடி அவர்களிருவரின் விவாதங்களை சீரியசாக கவனித்துக் கொண்டும் கலந்துகொண்டும் இருந்தார்!

சிறில் என்னிடம் நாகர்கோவிலில் 2 வருடமாக இருகின்றீர்கள் எங்க ஊர் எப்படி என்றார்? நான் நல்லதா நாலு வார்த்தை சொல்லி இருக்கலாம்,அதை விட்டுட்டு கன்யாகுமரி மாவட்டத்தில் பேசப்படும் ஆபாசவார்த்தைகள் குறித்து பேசினேன், அதிலும் குறிப்பாக கடல்புறங்களில் மக்கள் அதிகப்படியாக நாம் சொல்லத் தயங்கும் வார்த்தைகளை வீட்டில் அம்மா, சகோதரி இருந்தால் கூட சிறிதும் கூச்சமின்றி பேசுகின்றனர் என்று எனது சொந்த அனுபவத்தைச் சொன்னேன்! தருமி கவனமாக கேட்டுக் கொண்டிருந்தார், சிறிலின் முகம் களையிழந்ததுபோல் தோன்றியதும் எனக்கு வருத்தமாக இருந்தது,உடனே ஊரில் நல்ல விசயங்களையும் சொல்லி சமாதானப்பட்டுக் கொண்டோம்! உடனே லக்கி சென்னையில் பேசப்படும் அந்த மூன்றெழுத்து வார்த்தைப் பற்றியும் மற்றொருவர் மதுரைப் பகுதியில் பேசப்படும் வார்த்தை பற்றியும் பேசினார்கள் இறுதியில்,அப்படிப் பேசுவது அவர்களுக்குத் தவறாகக்தெரியாது என்றும் அது அவர்களின் வட்டார வழக்கு என்றும் பேசி ஒருவழியாக முடிக்கப்பட்டது!

பின் சரியாக 8:45 மணிக்கு என்னை அழைத்துச் செல்லவந்த எனது தம்பி பாரின் கீழ் வந்து கைத்தொலைபேசியில் அழைத்தார், நான் உடனே அனைவரிடமும் விடைபெற்றுக் கிளம்பினேன்,சிறில் கூட, இருங்க சரவணன், பேச்சுலர் தானே இருக்கலாம் தானே, என்று வற்புறுத்தினார்.அனைவரும் "பாதியில்" இருக்கும்போது நான் நடுவில் கிளம்புவதால் பணம் எப்படிக் கொடுப்பது என்று சங்கடம் எனக்கு, எனது நிலைமையை உணர்ந்த சிபி, நீங்கள் செல்லுங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றார் வாயில் சிகரெட் வைத்தபடி. என்னுடன் நண்பர் லக்கியும் வந்தார்,பின் லக்கி தன் பைக்கில் கிளம்ப நான் கடைசியாக அவரின் கன்னங்களைப் பிடித்து செல்ல முத்தம் கொடுத்து அனுப்பிவிட்டு என் தம்பியின் பைக்கில் நானும் கிளம்பினேன்!இப்படியாக எனது சென்னை பதிவர்களின் சந்திப்பு சந்தோசமாகவும், மன நிறைவுடன் முடிவுற்றது!


அன்புடன்...
சரவணன்.

Thursday, May 03, 2007

சென்னை வலைப்பதிவர்கள் சந்திப்பில் விடுபட்டவை - சுவாரஸ்யத்துடன்...

சென்னையில் பதிவர் சந்திப்பு 22ஆம் தேதி என்றாலும் நான் 20 ஆம் தேதியே சென்னைக்கு வந்துவிட்டேன்!இந்த சென்னைபயணத்தின் முக்கியக் காரணம் பதிவர்கள் சந்திப்பே! என்வே அந்த 22ஆம் தேதிக்காக காத்திருந்தேன்,

22ஆம் தேதியன்று நானும் எனது தம்பியும் சரியாக 2:50 க்கு நடேசன் பார்க்கில் நுழைந்தோம்!முன்னமே வலைப்பதிவர்கள் பற்றி பல பில்டப்கள் கொடுத்திருந்தேன்,அங்கே உள்ளே இருந்த மண்டபத்தில் சுமார் 25 பேர் குழுமி இருந்ததை பார்த்துவிட்டு இது தான் வலைப்பதிவர்கள் கூட்டம் என்று பெருமையடித்துக் கொண்டிருக்கும் போதே ஒரு இளைஞனும் யுவதியும் நெருக்கமாக நடந்து வந்தனர்.எங்களைக் கடந்த பின்னும் அவர்களிடையே கொஞ்சல் அதிகமாக இருந்தது ,அவர்களிருவரும் நேராக அந்த மண்டபத்திற்குச் சென்றனர், இதைக் கண்ட என் தம்பி என்னை கேவலமான ஒரு பார்வை பார்த்துவிட்டு, உண்மைய சொல்லு பதிவர்கள் சந்திப்பு தானா?இல்லை வேற எதாவதா என்று இழுழுழுத்தான்?

ஐய்யயோ! இதென்ன புது வம்பு என்று நினைத்து விட்டு மா.சிக்கு கைத்தொலைபேசினேன் , அனைவரும் மண்டத்தில் அருகில் புல்வெளியில் அமர்ந்திருப்பதாக கூறினார், நான் பதிவர்களுடன் சென்று உட்கார்ந்ததும் என் தம்பி கிளம்பிவிட்டான்(சில பெரிய பதிவர்களை பார்த்ததும் தான், என்னை நம்பி பார்க்கில் விட்டு விட்டுச் சென்றான்) அங்கு சென்று மாசியிடம் வணக்கத்தை தெரிவித்துவிட்டு மற்ற பதிவர்களை முதல்முறையாக பார்ப்பதால் யார் "எது"(பதிவு) என்று தெரியாமல் பொத்தாம் பொதுவாக சிரித்து வைத்தேன்! அருகில் ஒரு குரல் "வாயா மாப்ள உக்காருயா!" என்று பார்த்தால், அது மொட்டை! அது பாலபாரதி என்று புரிந்து கொள்ள எனக்கு அதிகநேரம் எடுத்துக் கொள்ளவில்லை! "அட சும்ம உக்காரு வெயிள்ள கருத்துட மாட்ட மாப்ள" என்று உரிமையுடன் பே(ஏ)சினார் எங்க ஊர்க்காரர்( பாலபாரதி ராமேஸ்வரம் நான் பரமக்குடி இருவரும் வளமையான(??!) இராமநாதபுரம் மாவட்டதை சேர்ந்தவர்கள்). கூட்டம் ஆரம்பிக்கும் முன் சும்மா பேசிக்கொண்டிருந்தனர் அப்பொழுது பேசிய டாப்பிக் - சட்டா"அம்பி".

சரியாக 3 மணிக்கு சாகரன் நினைவு மலர் வெளியீட்டுடன்,அவருக்கு மவுன அஞ்சலி செலுத்திவிட்டு கூட்டம் ஆரம்பமானது.அப்பொழுது பதிவர்களின் எண்ணிக்கை 24 ஐ எட்டி இருந்தது ,நேரம் ஆக ஆக வந்த பதிவர்களின் எண்ணிக்கை 40 ஆனது, என்ன பேசினார்கள் என்பதை பல பதிவர்கள் எழுதி விட்டார்கள்! வெளி நாட்டிலிருந்து அபி அப்பா முதலில் தொலைபேசினார் பலரிடமும் பேசினார்(சித்தப்பு நம்மளை மறந்துட்டீயல்ல! இருங்க அபி பாப்பாகிட்ட சொல்லி உம்மை என்ன பண்ணுறேன்னு). சிறிது நேரத்தில் எனக்கு பிடித்த பதிவர்களில் ஒருவரான கோவியார் தொலைபேசினார் என்னுடனும் பேசவேண்டுமென்று பலமுறை நினைத்ததாகவும் இப்பொழுதே முடிந்தது என்றார், நானும் சந்தோஷப்பட்டேன்!

சிறிது நேரத்தில் ஓசை செல்லா என் அருகில் வந்து உக்கார்ந்தார், இங்கு ஒரு விசயம் சொல்ல வேண்டும் மதியம் 1 மணிக்கு நான் டி.நகர் - ரங்கநாதன் தெருவில் தம்பியுடன் பர்ச்சேஸ் பண்ணீக் கொண்டிருக்கும் போது அந்தக் கூட்டத்தில் செல்லாவை பார்த்தேன், அவரின் புகைப்படத்தை முன்னமே பார்த்திருந்ததால் எளிதில் அடையாளம் காண முடிந்திருந்தது, கையில் ஒரு குழந்தையுடன் குடும்பத்துடன் சென்று கொண்டிருந்தார், சரி அவருக்குத் தெரியாமல் அவரை புகைப்படமெடுத்து அவருக்கு ஷாக் ட்ரீட்மெண்டாக பதிவிடலாம் என்ற ஒரு ஆசை கூட வந்தது, கையிலிருந்த கேமராவும் துறு துறுத்தது, ஆனால் இருந்த கூட்ட நெருக்கடியில் அது சாத்தியப்படவில்லை, நான் யோசிப்பதற்க்குள் அவர் வேறு இடத்திற்கு சென்று விட்டார் அத்துடன் எனது "ஆப்பரேஷன் செல்லா"வை விட்டுவிட்டடேன்!, இந்த நிகழ்வை செல்லாவிடம் கூறியதும் நல்ல வேளை சரவணன் நீங்கள் அப்படிச் செய்யவில்லை! ஏனென்றால் அது தனது நண்பனின் குடும்பம் என்றார், "சென்னையில் செல்லா-குடும்பத்துடன் "என்று நீங்கள் பதிவிட்டிருந்தால் என் வீட்டில் பிரச்சனை தான் என்று சிரித்தார்.பின் செல்லா பேசும் போது புரவுஸிங் சென்டர்களில் முக்கிய உரல்களை பிரிண்ட் அவுட் எடுத்து ஒட்டி இருப்பதாகவும் அவை, தமிழ்மணம், தேன் கூடு மற்றும் சற்றுமுன் என்று கூறும் போது, சற்றுமுன் நிறுவிய சிரிலின் முகத்தில் 1008 வாட்ஸ் பல்பு!

மக்கள் டீவியிலிருந்தும் , குங்குமம் பத்திரிக்கையிலிருந்தும் வந்திருந்தனர். பொன்ஸ் அக்கா வந்ததும் அட்டனென்ஸ் எடுத்துப் பார்த்துவிட்டு முதல் பெயரான உங்கள் நண்பனைப் பார்த்துவிட்டு அருகிலிருந்தவரிடன் சரவணன் யார்? என்று விசாரித்தது என் காதில் விழவே நானாகவே , அது நான் தான் என்றேன்,அவர் புன்னகைத்தார்.என் அருகில் சிபி, யார் என்ன பேசினாலும் எங்களுக்கு மட்டுமே கேட்பதுபோல் கலாய்த்தல் கமெண்டுகள், மற்றொருவர் நவீன் பிரகாஷ் தன் கவிதைக்களுக்கு கரு தேடும் முயற்சியில் தீவிரமாக(??!) வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். ஜிராவிற்கு அவசர அழைப்பு வரவும் உடனே கிளம்பினார், எனதருகில் வந்து கை குழுக்கி விட்டு" உங்கள் நண்பன்" என்று சொன்னதும் உங்களின் பதிவுகள் அனைத்தும் நினைவில் வந்து போனது சரவணன் தொடர்ந்து நல்ல பல பதிவுகள் எழுதுங்கள், என்று என் தலையில் பனங்காயை வைத்தார்! அவருடன் நிறைய உரையாடவேண்டும் என்று நினைத்திருந்தேன், உடனே கிளம்பியது எனக்கு ஏமற்றமே!

பதிவுகளில் நடப்பதுபோன்று அங்கும் அனைத்துவிதமான விவாதங்களும் வந்தன , ஆனால் நாகரீகமான முறையில்,லக்கியாரைப் முன்னமே ஒருமுறை இட்லிவடையாரின் பதிவில் இட்ட படத்தில் பார்த்திருந்ததால் அடையாளம் காண சிரமமாகவில்லை!என் அருகில் வந்த லக்கியிடம் உங்களை எளிதில் அடையாளம் கண்டுகொண்டேன் என்றேன். எப்படி? என்றார், உங்களின் உடன்பிறப்பு உடையைப் பார்த்துத்தான் என்றேன் சிரித்தார்.(கருப்பு சிகப்பு நிற உடையணிந்திருந்தார்). ஒரு பதிவர் அனைவரிடமும் வந்து ,சென்றுவருவதாக கூறினார், என்னிடமும் கூறிச்சென்றார், பின் கேட்டதற்கு அவர் வடுவூர்குமார் என்றார்கள் அவரிடம் லினக்ஸ் பற்றி சில விசயங்கள் கேட்களாம் என்றிருந்தேன் , அவரிடமும் உரையாடமுடியாமை எனக்கு மீண்டும் ஏமாற்றமே!

ஒருமணி நேரத்திற்க்குப் பின் தனித்தனியாக பிரிந்து சென்றனர் தம் அடிப்பதற்கு! பாஸ்டன் பாலா ஒருகுழுவுடன் திடீரென தீர்த்த(??)யாத்திரைக்கு கிளம்பிவிட்டார்.பொன்ஸ் அக்கா அனைவருக்கும் தட்டைமுருக்கு கொடுத்தார்,பின் நான், சிபி மற்றும் நவீன் மூவரும் வெளியிலிருக்கும் கடைக்குச் செல்ல அங்கு சிபி "மட்டும்" தம் அடித்தார். அப்பொழுது எதிபுறத்தில் இராமகி ஐயா அவர்கள் தமது வாகனத்திற்காக காத்திருப்பதைப் பார்த்திவிட்டு நான் மற்ற இருவரிடமும் அனுமதி பெற்று அவரிடம் சென்று சிறிதுநேரம் பேசினேன், தமிழ்பற்றிய அவரின் பதிவுகளையும் சமீபத்திய சுடர்பதிவில் இடம் பெற்றிருந்த வரலாற்றுச் சம்பவங்களையும் நினைவு கூர்ந்தேன், மகிழ்ந்தார், அவரும் எனது கிராமம் பற்றிய பதிவைப் பற்றிச் சொன்னார்.அவர் கிளம்ப நாங்கள் மூவரும் மீண்டும் பார்க்கின் உள்ளே வந்தோம்!, பதிவர்கள் அனைவரும் தனித்தனிக் குழுவாக நின்று பேசிக்கொண்டிருந்தனர் , தோராயமாக ஒரு 10 குழு அங்கு நின்றிருக்கும்!

பின்னர், வாருங்கள் தேனீர் சாப்பிட என்று பாலபாரதி அழைக்க , அனைவரும் பார்க்கிலிருந்து வெளியேறினோம்!


அடுத்த(நிறைவுப்)பகுதியில்....

* தேனீர் சாப்பிடும் போது பாகச மகளிரணியால் பாலாவிற்க்கு எதிராக நடந்த சதி!

* பார் நோக்கி சென்ற பார்புகழும் பதிவர்கள்

* புறாக்கறி கேட்ட சிபியாரின் லொள்ளூ

மற்றும் சில சுவாரஸ்யமான தகவல்களுடன்........

இரண்டாவது(நிறைவுப்)பகுதிக்கு .இங்கே கிளிக்கவும்


அன்புடன்...
சரவணன்.

போக்குவரத்து நெரிசலில் நான்!




எல்லோரும் ஓடுகின்றனர்!வேறு வேறு திசைகளில்
ஓவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான தேடல்!
நேற்று என் அருகில் ஓடியவர்,இன்று எதிர்திசையில்

ஒவ்வொரு முகமாக கூர்ந்து பார்கிறேன்,
அனைத்துமே நன்கு பரிச்சயமான முகங்களே!
ஆனால் எங்கும் தென்படவில்லை எனது மூர்க்க முகம்!

நிம்மதியாய் புரண்டு படுக்கின்றேன்!
ஆம்!கனவுகளில் மட்டுமே சாத்தியப்படும்!
பிறநேரங்களில் அந்த கூட்ட நெரிசலில்
காணாமல் போகும் ஒரு சாமானியன்!

மீண்டும் ஓட்டம் ஆரம்பமாகின்றது!

அன்புடன்...
சரவணன்.

Monday, April 16, 2007

நாகர்கோவில் வலைப்பதிவர்கள் சந்திப்பில் நிகழ்ந்தவை...

நான் வலைப்பதிவு உலகிற்கு வந்து சில ஆண்டுகள் ஆகியிருந்தாலும் சக பதிவர்களை சந்திப்பது இதுவே முதன்முறை! (தேவுடனும்,செந்தழல் ரவியுடனும் மட்டுமே தொலைப்பேசியுள்ளேன்)மதியம் 1 மணிக்கு வருவதாக இருந்த சிறில் 2:45க்கு வந்ததால் சந்திப்பு சிறிது தாமதமாகவே தொடங்கியது.(சிறில் தமிழ் நாட்டுக்கு வந்துட்டீகல்ல இப்படித்தான் இருக்கனும்):))

நான் "எனது" கருப்புக் குதிரை பல்சரில் (இளா!இங்கு நான் எனது என்பது ஆணவம் அல்ல, தன்னிலை விளக்கம்:))))அங்கு சென்றபோது அங்கிருந்தவர்கள் இருவர், ஒருவர்(ஒன்றிரண்டு வெள்ளை முடிகள்,கருப்புவெள்ளை கட்டம் போட்ட இரண்டுபாக்கெட் சட்டை,இனிஷியலுடன் கூடிய மோதிரம்,பெரிய டயல் உள்ள கைக்கடிகாரம் , ஜீன்ஸ், காலில் நைக்- அமெரிக்க ரிட்டன் போல் இருந்தவர் திரு.சிறில் அலெக்ஸ் அவர்கள்.மற்றொருவர் எளிமையின் வடிவம்,இந்த மண்ணின் மைந்தர் திரு.மா.சிவக்குமார் அவர்கள்,

அறிமுகம் முடிந்து அருகில் இருக்கும் டீக்கடையில் டீ குடித்துக் கொண்டே தற்பொழுதைய பதிவுகளைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.எனது எழுத்துக்கள் பற்றிக் கேட்டார்கள்,நான் விவாத மற்றும் சீரியஸ் பதிவுகளில் அவ்வளவாக வருவதிலை ஆனால் அனைத்து வித பதிவுகளை படிப்பேன் என்றும் முதல் சாய்ஸ் நகைச்சுவையுடன் கூடிய பதிவுகள் தான் என்றும் கூறினேன்.பின் சிறில் தானும் நகைச்சுவை பதிவு எழுதுவேன் என்றும் ஆனால் யாரும் அழைக்கவில்லை என்றும் வருத்தப் பட்டார், வருத்தமில்லா வாலிபர் சங்கமே இதோ ஒரு நல்லவரு சிக்கி இருக்காரு ஃபிரியா இருந்தீங்கன்னா சொல்லுங்க வரும்போது சங்கத்துக்கு கூட்டிக்கொண்டு வருகிறேன்!

சிறிது நேரத்தில் திரு.அரவிந்தன் நீலகண்டன் வந்து கலந்துகொண்டார், பின் மூவரும் திரு.குமரிமைந்தன் என்னும் மூத்தப் பதிவரை சந்திக்க சென்றோம். அங்கு அவர் நண்பருடன் இருந்தார். திரு.குமரிமைந்தன் பார்ப்பதற்க்கு நமது சக பதிவர் ஐயா திரு.ஞானவெட்டியானை நினைவுப்படுத்தக் கூடிய தோற்றம் அதே கம்பீர(பயமுறுத்த கூடிய) மீசை!:)))

அதன் பின் தான் ஆரம்பித்தது வி-வாதம், என்னன்னவோ பேசினார்கள் குமரிக்கண்டம் - லெமூரியா- வங்கதேச நிலப்பரப்பு - அமெரிக்க ஏகாதிபத்தியம் - கம்யூனிஸ்ட் - அமெரிக்க ஆப்பிரிக்க நிற வேற்றுமைக் காரணங்கள் - ரஷ்யா - லெனின் - ஹிட்லர் -(சிறில் 5 முறை கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டு நெளிந்துகொண்டிருந்தார்,அவ்வப்போது எனக்கு சில சினேகப் புன்னகைகள்) ஜெர்மனிய மொழி - ஆரிய திராவிட விவாதம் -ஆயக்கலைகள் 64 - பாதரசத்திலிருந்து தங்கம் - உலகஷேர்மார்க்கெட்டில் இந்தியாவின் நிலைப்பாடு - பெரியார் - ராஜாஜி - தமிழக அரசியல் - (அவ்வ்வ்வ்வ்--- இது நான் தானுங்க!இப்படி சிக்கீட்டியே சரவணா), ஒரே ஆறுதல் வலைப்பதிவின் தற்பொழுதைய நிலை பற்றி பேசவில்லை, திரு.குமரிமைந்தன் அவர்கள் பதிவுகளை படித்து பல நாட்கள் ஆகிவிட்டதாம். உண்ணையாகவே ஒரு நல்ல விவாதம் தான் ஆனால் என்னால் தான் அனைத்து விசயங்களையும் உள்வாங்கிக் கொள்ள சிரமமாக இருந்தது.வெளியில் நல்ல மழை, சென்றால் நனைந்துவிடுவேன் வேறு வழியின்றி விவாதம் நடக்கும் போது நான் ஒரு ஈ போல அமைதியாக இருந்தேன் ஏனென்றால் அனைவரும் இரும்பு அடித்துக் கொண்டிருந்தனர், விவாதத்தின் நடுவில் சிறில் அவர்கள் என்னிடம் " நாங்க சீரியஸா பேசிக்கிட்டு இருக்கிறோம் நீங்க இதை வச்சு காமெடியா எப்படி எழுதுவதுனு யோசிக்கிறீங்களா என்றார்).

விவாதம் மிகவும் சீரியசாக போய்க்கொண்டிருந்தது பின், சிறில் தான் குமரிமைந்தனிடமிருந்து மாசியையும் அரவிந்தனையும் வழுக்கட்டாயமாக அழைத்துக் கொண்டு வெளியே வந்தார்( நான் அதற்கு முன்பாகவே பைக்கை ஸ்டார்ட் செய்துவிட்டேன்:))).பின் நாங்கள் சென்ற இடம் SLB பள்ளி வளாகம், எனக்கு மகிழ்ச்சியே( ஹி ஹி .. இங்கு தானே பெண்கள் மாலைநேரத்தில் வாக்கிங் வருவார்கள்).அப்பொழுது சகபதிவர் வல்லிசிம்ஹனிடமிருந்து மாசி அவர்களுக்கு அழைப்பு வந்தது புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு!

அங்கு சென்றதும் விவாதம் மீண்டும் ஆரம்பமானது தற்பொழுது களத்தில் அரவிந்தன் - சிறில். என் அருகில் சக "ஈ" மாசி அவர்கள்,அவர்களிருவரின் விவாதங்கள் நாகரீகமான் முறையிலேயே இருந்தது. சிறிலுக்கு அவரின் சகோதரியிடமிருந்து ஃபோன் வர, மீண்டும் சென்னையில் சந்திக்கலாம், கண்டிப்பாக வரவும் என்று அழைப்புவிடுத்து விட்டு விடைபெற்றர்.பின் நாங்கள் மூவரும் பேசிக்கொண்டிருந்தோம் , காமெடி பதிவுகள் எழுதுவதற்கு போதிய சென்ஸ் இல்லை என்று அரவிந்தன் வருத்தப் பட்டார்( யாருக்குத்தான் இங்கு கிலோக்கணக்கில் இருக்குது?)அவர்களிருவரும் காந்தீயம்,RSS பற்றி பேசினர்.மாசி அவர்கள் ஒரு ராமகிருஷ்ண பரமஹம்சரின் கதையை சொல்ல அதற்கு மாற்றுக் கருத்துடைய கதையை அரவிந்தன் சொன்னார் அதே ராமகிருஷ்ணரிடமிருந்து!
(ரெம்ப பெரிய மக்கள்களை சந்திக்கப் போற சைலண்டாவே இருனு சொன்ன புலிபாண்டி சிவா எங்கேயா உன் காலு(புலிக் கால் சூப்பு வைக்க அல்ல))

சிறுது நேரத்தில் அரவிந்தனும் சென்றுவிட நானும் மா.சிவக்குமார் மட்டுமே அங்கிருந்தோம்.பதிவுகள் பற்றிப் பல விசயங்கள் போசினோம். கிரீமி லேயரின் சமீபத்திய பதிவுகள், மகேந்திரனின் நறுக் தலைப்புகள், பொன்ஸின் fountain - head-ayn-rand, திரும்பிப் பார்க்கும் சூரியன் திரு.ஜோசப், சங்கத்து பதிவுகள், மை ஃபிரண்ட்ன் முதல் பின்னூட்டம்,அமுக,vsk அவர்களின் லப்டப்,vsk விற்கும் கோவியாருக்கும் உள்ள நட்பு,சிபியின் லொள்ளு,வெட்டியின் கொல்ட்டி,கொத்ஸ்ன் பின்னூட்டம்,துளசி டீச்சர், உஷா,வாத்தியாரின் வகுப்பறை,அபிஅப்பா கண்மனி போன்ற புதிய பதிவர்கள்,பாஸ்டன் பாலாவின் படிக்கும் திறன்,பாலபாரதி,டோண்டு,ரவியின் வேலைவாய்ப்பு பதிவு,லக்கியாரின் உடன்பிறப்பு பதிவுகள்,மற்றும் பல...

பின் இருவரும் நாகராஜ கோவில் சென்று (கடைசிவரை சாமி கும்பிடவில்லை)அங்கும் பேசினோம், ஒரு சகோதரன் போல என்னிடம் அன்பாகவும் என் கம்பெனி பற்றியும் அதை எப்படி மேம்படுத்துவது என்பது பற்றியும் எனக்கு அறிவுரைகள் சொன்னார். நன்றி திரு. மாசி அண்ணன் அவர்களே. பின் அவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் அங்கேயே இரவு உணவு. ரெம்ப நாள் கழித்து வீட்டுச் சாப்பாடு சாப்பிட்ட திருப்தி!அப்பா, அம்மா இருவரும் என்னை மிகவும் பாசமுடன் நடத்தினர். எனக்கே ஆச்சர்யம் முதன் முறை சந்திக்கும் ஒரு பதிவரின் அன்பு என்னை நெகிழ வைத்தது. (என்ன ஒரு கவலை வழக்கமான சனிக்கிழமைகாய்ச்சல்(saturday fever) டானிக் குடிக்க முடியவில்லை!)இவ்வாறாக என் முதல் பதிவர்கள் சந்திப்பு இனிதே முடிவுற்றது.


அன்புடன்...
சரவணன்.

Saturday, April 14, 2007

வலைப்பதிவர் சந்திப்பு - நாகர்கோவிலில்.

அன்பு வலைப்பதிவர்களுக்கு!
"சற்றுமுன்" திரு.சிறிலலெக்ஸ் அவர்கள் கைத்தொலைப்பேசியில் தொடர்புகொண்டு தற்பொழுது நாகர்கோவில் வந்திருப்பதாகவும், திரு.மா.சிவக்குமார் அவர்களையும் அழைத்துக்கொண்டு வருவதாகவும் மதியம் 1 மணியளவில் கலெக்டர் அலுவலகம் முன்(எப்போதும் இங்கு போராட்டங்கள் மட்டுமே நடக்கும்) சந்திப்பு நடத்தலாம் என்றும் தெரிவித்தார். நேரம் மிகவும் குறைவாக இருக்கின்றது! நாகர்கோவில் மற்றும் அதன் அருகில் இருக்கும் நண்பர்கள் சந்திப்பில் கலந்துகொள்ள வேண்டி இந்தப் பதிவு.

தொடர்புகொள்ள: சிறில் அலெக்ஸ் - (9444846025)



அன்புடன்...
சரவணன்.

Monday, March 26, 2007

கிரிக்கெட் வீரர்களின் ரகசியத் திட்டம் - ஆதாரத்துடன் .

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பீதியின் உச்சத்தில் இருக்கின்றனர், ஊருக்குப் போனா எப்படியும் ஊருகா தான் என்பது அவர்களுக்குத் தெரிந்துவிட்டது. வேறு என்ன பண்ணுறதுனு எல்லோரும் குண்டக்க மண்டக்க யோசிச்சு, மாறு வேசம் கட்டிப்போகலாம்னு ஐடியா போட்டிருக்கானுக, (சச்சின்: ஹிம்.. காலைல காய்கறி வாங்கப் போனதையே லக்கிகிட்ட போட்டுக் குடுத்துட்டானுக!)

இருந்தாலும் இந்தியா வந்ததும் என்ன மாதிரி வேசம் கட்டுறதுனு, ஒரு ஃபோட்டோ செஷன் வச்சிருந்தானுக , அதை அப்படியே அபேஸ் பண்ணி உங்களுக்கு படம் காட்டுறேன்.
மக்களே இங்கின கீழ இருக்கிற படங்களில் உள்ள மாதிரி எங்காவது பார்த்தீங்ன்னா, என்ன? ஏதுனு விசாரிக்காமா ஒரு சிக்சரும் , ஒரு ஃபோரும் போட்டு சாத்திடுங்க,



(இதுக்குத் தான் 5ம், 10- மா அடிச்சிட்டு அவசரமா வந்தியாக்கும் )




(ஹிம்.. ஒரு காலத்துல இங்கிலாந்துக் காரங்கிட்டயே சட்டைய கலட்டிச் சுத்துன, இன்னைக்கி உன் நிலைமை இப்படியா ஆகனும்)




(என்னத்தை சொல்ல? வீரு இப்போத்தாம்யா நீ பீரு ஊத்திக் கொடுக்குற ஆள் மாதிரி இருக்கிற)




(சச்சின் கிரிக்கெட்ல கலக்கினதைவிட இப்பத் தான் நல்லா கலக்குறீங்க!)




(உன் நிலைலை ரெம்ப பரிதாபமா இருக்கும் போலயே? ஆனா இப்போவும் சுவரு தானா?)


(டேய் பலக்கடப் பாண்டி, வியாபாரம்லாம் எப்படி? நல்லா "ஓடு"தா?)


(ஆடுரா ராமா, ஆடுரா ராம, தோனி! நீ கிரிக்கெட் விட்டு ஓடுரா ராமா, ஓடுரா ராமா)




(கிரிக்கெட் ஆடுரானா புள்ளைக பின்னாடி சுத்துற? அவ பேரு என்ன?இஷா செர்வானியா குர்வானியா அவளுக்கு வச்சிவிடு போ.., ஜாகிர் பரவாயில்ல கொஞ்சம் ஆடினான்)





(ஹிம், எப்போபாரு காய்சல் கண்டவன் மாதிரித் திரியிறது! மொதல்ல இதை நீ தின்னுட்டு வா அப்புறம் நாங்க வாங்கறோம்)




(பாவம் உன் நிலைமை, கூப்பிட்டு போய் அறிவிக்கப் படாத ஃபோட்டொகிராஃபர் மாதிரி ஆயிட்டியே,)



அன்புடன்...
சரவணன்

Wednesday, March 21, 2007

பார்த்தேன் ரசித்தேன் - கல்லூரி கலாட்டா

கடந்த திங்கள் கிழமை உகாதியா? யுகாதியா? அன்னைக்கு சரி ஆந்திராவில் இருக்குற நம்ம பயலுக்கு ஃபோன் பண்ணி வாழ்த்துச் சொல்லலாமேனு பண்ணீனா அவன் என்னடான்னா, மாப்பு ஆந்திர வருடப் பிறப்புக்கு வாழ்த்தெல்லம் சொல்லுர ஆந்திராப் பசங்க கிட்ட அசிங்கப் பட்டதை மறந்திட்டியானு(நினைவில் வைத்துக் கொள்ளவும் பசங்ககிட்ட மட்டுமே) கேட்டான் , அசிங்கமா? அப்படீனு ஒரு அப்பாவி எக்ஸ்பிரஷன காமிசிட்டு (ஒன்னுனா நினைவில் இருக்கும் நாமக்குத்தான் ஆயிரம் இருக்கே இதுல எதை நியாபகம் வச்சிருக்க முடியும்) இல்லையே மாப்பு, அப்படி எதுவும் நடந்துச்சா? ன்னு கேட்டேன் , அதற்கு அவன் எப்படித்தான் இப்படி சங்கடப் படாம பேசமுடியுது அப்படினு சொல்லீட்டு ஒரு சம்பவத்தை நியாபகப் படுத்திட்டான் ,அன்னைக்கு நான் பட்டதைத் தான் மக்கா உங்ககிட்ட சொல்லப்போறேன்.

(கைப்பூ ஒரு பதிவு எழுதுறதுக்கு முன்னாலா ஒரு பில்டப் கொடுக்கனும்னு சொன்னியே கரிக்கிட்டா ஃபாலோப் பண்ணுரனா?)


நான் கல்லூரியில் படிக்கும்(??!) போது நடந்த சம்பவம் அது, அப்போ என்னுடன் சில"வெட்டி"த் தனமான ஆந்திராப் பசங்களும் ஹாஸ்டலில் தங்கியிருந்தனர், பசங்க தான் வெட்டி, ஆனா பொன்னுக எல்லாம் தங்கக் கட்டி,(டி.ஆரேட அரட்டை அரங்கம் பாக்காதேனா கேட்கமாட்டேங்கிறியே சரவணா) பாக்குரதுக்கு அவங்க ஊர் புகழ் திருப்பதி லட்டு கணக்கா இருப்பாங்க,

சரி அவங்ககிட்ட எதாவது கடலை போடுறதுக்காவது வேணுமேனு அவனுககிட்ட பழக்கம் வச்சிகிட்டேன், என்ன ஒரு கஷ்டம் கொரகம் அவனுகளுக்குத் தமிழ் சுட்டுப் போட்டலும் வராது நமக்கு தலகீழா கட்டிவச்சு அடிச்சாலும் இங்கிலிபீசு வராது, இருந்தாலும் தேவைப் படுமேனு அப்படியே தெரிஞ்ச, குட் நைட், குட் மார்னிங், ஐயம் குண்டலகேசி னு என்னத்தயோ வச்சு ஒப்பேத்திகிட்டு இருந்தேன்,

ஒரு விடுமுறை நாளில் KG காம்ளக்சில் பிரசாந்த் மற்றும் "லூசுக் கதாப்பாத்திரம்"புகழ் லைலா மற்றும் நம்ம ஆப்பக் கடை சிம்மு அக்கா நடிச்ச "பார்த்தேன் ரசித்தேன்" படம் பார்த்து விட்டு ஹாஸ்டலுக்கு வந்தேன்.ஹாஸ்டல் கேட் அருகில் ஒரு கடை உள்ளது, அந்தக் கடையில் நம்ம ஆந்திரா லட்டுங்க ஒரு 4 டிக்கெட் இருந்துச்சு, நல்ல வேளை ஆந்திராப் பசங்க இல்லை , சரவணா இங்கயும் பார்த்து ரசிக்கலாம்டா அப்படினு உள்ளே நுழைந்து பந்தாவா ஒரு பூமர் வாங்கி ஸ்டெயிலா அதை வாயில் போட்டு விட்டு அவர்களை தற்செயலாக பார்ப்பது போல் பார்த்து விட்டு ஒரு ஹாய் ஜொள்ளினேன்(ஹி ஹி..), அவங்களும் பதிலுக்கு ஹாய் சொன்னார்கள், ஆகா ஒர்க் அவுட் ஆகுதுடா விட்டுடாதா அப்படியே பிக்கப் பண்ணி குண்டூரு வரைக்கும் போய் கும்மீடலாம்டானு உள் மனசு செல்லும் போதே,அங்கிருந்த STD பூத்த தொரந்துக்கிட்டு ஒரு 3 ஆந்திராப் பக்கிக வந்துட்டாங்க,காலைல இருந்து ஒன்னும் ஆகலையேனு நினைச்சேன் இந்தா வந்துட்டாங்களா இங்கிலீசுக்கார தொரைங்க, பொன்னுக முன்னாடி இன்னைக்கித் தொங்க விட்டுருவாங்களேனு,


மெதுவா அங்கிருந்து எஸ்கேப் ஆகலாம்னு நடக்க ஆரம்பிக்கும் போது ஒரு தடியனின் கை செல்லமா(??!) என் தோள்ள விழுந்துச்சு, மெதுவாத் திரும்பி நாமெல்லாம் யார் வம்பு தும்புக்கும் போறதில்லை அப்படினு ஒரு அப்பாவி முகத்தை வச்சிக்கிட்டு என்ன? னு கேட்டேன், எங்க போய்ட்டு வர்றனு கேட்டானுக(சொன்னா மட்டும் புரிஞ்சிடப் போகுதா),படம் பார்க்கன்னேன், என்ன படம்னு ஆரம்பிச்சாய்ங்க அது தான் பிள்ளையார் சுழி...

மகா ஜனங்களே!!பார்த்தேன் ரசித்தேன் என்கின்ற படத்தின் பெயரை நான் எப்படித்தான் புரிய வைப்பேன், அதுவும் மொழிய வேற பொயர்த்து புரிய வைக்கனும், ஃபிகருங்க வேற பக்கத்துல இருக்குதுங்க என்னடா பன்னுறதுனு யோசிச்சு,

சரி முதலில் பார்த்தேனுக்கு விளக்கலாம்னு saw அப்படினு சொன்னேன் அவனுகளுக்கு புரிஞ்சிடுச்சு, அடுத்து ரசித்தேன் அப்படிங்கிறதை எப்படி சொல்லுரதுனு தெரியலை, ஃபிகருங்க வேற என்னைப் பரிதாபமாப் பாக்குதுங்க,என்னன்னவோ சொன்னேன் , உகூம்...அவனுகளுக்கு ஒன்னும் புரியலை, டேஸ்ட், எஞ்சாய், சைட்- அப்படினு ஏதே என் அறிவுக்கு எட்டாததையும் கஷ்டப் பட்டுச் சொன்னேன், ஆனா முடியலை, நல்ல வேளை லட்டுங்க எல்லாம் ஃபோன் பண்ண பூத்துக்குள்ள போச்சுங்க, அப்பத்தான் தகிரியமே வந்துச்சு அவனுகளைப் பார்த்து "போங்கடா கொல்டிங்களா" அப்படினு சொல்லிட்டு ஓடியாந்துட்டேன், மக்களே நீங்களே சொல்லுங்க அத எப்படித்தான் அவிங்களுக்கு வெளக்குரதுனு?



அன்புடன்...
சரவணன்.

Monday, March 19, 2007

மீண்டும் சிக்கலில் கோவி.கண்ணன்


கோவை. கண்ணன் அவர்களின் அக்கிரமமான ஆக்கிரமிப்பால் , தமிழ்மணத்தில் மறுமொழியப்பட்ட இடுகைகளின் கீழ் அவரின் பதிவு மட்டுமே வரும்படி செய்துள்ளார், இதைப் பற்றி கேள்வி கேட்கப் படலாம் என்று உடனே "நண்பர்களே மன்னிக்கவும்" என்று ஒரு பதிவு வேறு போட்டு விட்டார்,இது தமிழ்மணத்தின் முகப்பு பகுதியையும் முடக்கம் செய்ய அவர் எடுத்துக் கொண்ட இரண்டாவது சதியாகவே எனக்குப் படுகின்றது,கொழசாமிகளா ஓடியாங்க...


அன்புடன்...
சரவணன்.

Wednesday, February 28, 2007

மொழி - திரை விமர்சனம்


மொழி - தயாரிப்பாளர் "நடிகர்" பிரகாஷ்ராஜ், டைரக்டர் ராதாமோகன், " அழகிய தீயே"க்குப் பிறகு இருவரும் இணையும் படம். எனக்குப் பிடித்த சில தமிழ்ப் படங்களில் " அழகிய தீயே" வும் ஒன்று, அதே கூட்டணி ஏமாற்றவில்லை!

"ஜோ" ஒரு வார்த்தை கூட பேசாமல், அவரைப் பற்றி அதிகம் பேச வைக்கும் படம். பிரித்தீவ் ராஜ் மற்றும் பிரகாஷ்ராஜ் இருவரும் திரைப் படத்திற்க்கு இசை அமைக்கும் இசை அமைப்பாளர்கள். அவர்களின் வாழ்வில் இசை பற்றி அறியாத இருவரின் வருகை பற்றிய படம் , அதில் ஒருவரான ஜோ விற்க்கு இசை என்றால் என்ன? அதை எப்படி உணருவது? என்று கூட அறிய முடியாத வாய்போசாத,காது கேட்காத கதாப் பாத்திரம்!

ஜோ வை பார்க்கும் முதல் பார்வையிலேயே பிரித்தீவ் ராஜிற்க்கு தலையின் மேல் பல்பு எரிகின்றது( காதல்). இருவரும் ஒரே அப்பார்ட்ண்ட் என்பதை அறிந்து மகிழ்ந்து அவரின் பெயர் கேட்டு அலைகின்றார். பின் ஜோ- வினால் வாய்பேச காது கேட்க முடியாது என்று தெரிந்ததும் அப்படியே விக்கித்துப் போகின்றார், ஆனால் ஜோ வின் மேலான காதல் முன்பை விட அதிகரிக்கின்றது. பின் ஜோ வின் தோழி ஸ்வர்ணமால்யா வின் மூலம் அவரைப் பற்றிய அனைத்து விசயங்களையும் தெரிந்து கொண்டு அவரின் மேல் பரிவுடன் பழகி, ஜோ வின் "மொழி"யை பிரித்தீவ் ராஜும் கற்று நல்ல நண்பர்களாக இருக்கின்றனர். ஒரு கட்டத்தில் பிரித்தீவ்ராஜ் , ஜோ மீதுள்ள தன் விருப்பதை தெரிவிக்கின்றார், அது பிடிக்காத ஜோ அவரை சந்திப்பதை நிறுத்துகின்றார், இதற்கிடையில் அந்த நால்வர் கூட்டணியில்(ஜோ, ஸ்வர்ணமால்யா, பிரித்தீவ் ராஜ், பிரகாஷ்ராஜ்) இருக்கும் பிரகாஷ் ராஜிற்கும் தலையில் பல்பு எரிகின்றது, விளைவு ஸ்வர்ணமால்யாவுடன் பிரகாஷ்ராஜிற்கு திருமணம் நிச்சயமாகின்றது, அந்த சமயத்தில் தன் மீது பிரித்தீவ் ராஜ் கொண்டுள்ள காதலை உணர்ந்து ஜோ ,பிரிதிவ் ராஜிடமே சேருகின்றார் - முடிவு சுபம்.

ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப் படும் திரைப் படங்கள் மிகவும் அரிது, இந்தப் படம் அந்த அரிதான வரிசையில் சேரும், ஜோ - விற்க்கு கிடைத்த ஒரு அரிய படம்,

இசை என்றால் என்னவென்று, அதை அறியும் முயற்சியில் அதிக ஒலியில் ஸ்பீக்கரின் மேல் கைவைத்து அதன் அதிர்வை ரசிக்கும் போது ஜோ வின் முக பாவம் அருமை,


பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் ஜோ ஏற்றிருந்த கதாப் பாத்திரம் அவரின் ரசிகர்களுக்கு மகா எரிச்சலையும் , கோவத்தையும் தந்திருந்ததாக பதிவுகளின் வாயிலாக அறிந்திருந்தேன், நிச்சயம் இந்தப் படம் அந்த கோவத்தை மறக்கடித்து அவரின் மேல் பழைய நல்ல மதிப்பை ஏற்படுத்தும், ஒரு நல்ல நடிகையை திருமணத்திற்க்குப் பின் தமிழ் சினிமா இழந்துவிட்டது என கனிமொழி வருத்தப் பட்டது நியாயமே!

பிரித்தீவ் ராஜ், பிரகாஜ் ராஜ் நண்பர்களின் கூட்டணி அருமை சகஜமாக பேசும் போது இழையோடும் நகைச்சுவை ரசிக்க வைக்கின்றது,
பீத்தேவன் பிறந்த நாளுக்கு பீர் அடித்துவிட்டு அபார்ட்மெண்ட் செக்ரட்டரி வீட்டின் முன்னேயே பிரகாஷ்ராஜ் வாந்தி எடுப்பதும்,

பிரி.ராஜ் : வாந்தி வந்தா நம்ம வீட்டு பாத்ரூம்ல எடுக்கவேண்டியது தானே, ஏன் செக்ரட்டரி வீட்டின் முன் எடுத்த?

பிர.ராஜ் : ஐய்யயோ..! அப்போ அது நம்ம வீட்டு பாத்ரூம் இல்லையா? அதானே நம்ம வீட்டு பாத்ரூம்ல செக்ரட்டரிக்கு என்ன வேலைனு கூட தோணுச்சு!!

காதல் வந்தால் தலைக்கு மேல் பல்பு எரிவதும், மணி ஓசை என சில விசயங்கள் அருமை, அதிலும் பிரகாஷ்ராஜ் க்கு மணி அடிப்பது நம்ம பொன்ஸ் அக்காவோட நண்பன்(தனி யானை சுதந்திரம்:))),

"இளைமை புதுமை" ஸ்வர்ணமால்யாவிற்க்கு நல்ல கதாப் பாத்திரம், (யக்கா இப்படியெல்லம் நடிக்கிறதை விட்டுட்டு எப்படி எப்படியோ நடிக்கிறீங்களே! )

பாஸ்கருக்கு நகைச்சுவை கலந்த சோக பாத்திரம், 1975க்கை கூட "சமீபத்தில் 1975" என்று தான் குறிப்பிடுவார், அப்பொழுதெல்லாம் நமக்கு சக பதிவர் திரு. டோண்டு அவர்களின் நினைவு வருவதை தவிர்க்கமுடியாது!

தயாரிப்பளருக்கும் , டைரக்டருக்கும் தைரியம் அதிகம் தான், தமிழ்சினிமா என்றாலே ஆளுயர அரிவாள், சுருக்குக் கத்தி, ரத்தம், தாலி செண்டிமெண்ட் என உருப்படியான(??!) எதுவும் இல்லாமல்,முக்கியமாக காதைகிழிக்கும் குத்துப் பாட்டும், இரட்டை அர்த்த வசனங்களும், ஹீரோ புராணமும் இல்லாத அக்மார்க் தமிழ் படம். ஏனென்றால் இவை இல்லை என்றால் நாம் தான் படம் பர்ப்பதே இல்லையே (உ.தா அன்பே சிவம் , கன்னத்தில் முத்தமிட்டால், இன்னும் "சில" நல்ல படங்கள்!).

குடும்பத்துடன் பார்க்கக் கூடிய நல்ல படம்( கொதஸ் பையனை தகிரியமா அழைச்சிட்டுப் போங்க!) பொதுவாகவே நான் படங்களை விமர்சனம் பண்ணுவதில்லை எல்லாம் அனுபவத்தினால் தான், படம் பார்த்துவிட்டு நண்பர்களிடம் , படம் அருமை என்னா! ஸ்டோரி, என்னா! சாங்ஸ் அப்படீனூ ஃபீல் பண்ணிக்கிட்டு இருக்கும் போதே ஒரு குரூப் வரும் , த்தூ படமாடா அது மனுசன் பார்ப்பானா(??!) அதை, என்று கிழித்து தொங்கவிடுவார்கள் படத்தையும் என்னையும், பல முறை தொங்கவிடப்பட்டிருகிறேன்,

பி.கு: எனவே மகாஜனங்களே! இதை விமர்சனமாக மட்டும் எடுத்துக் கொள்ளவும், படம் பார்ப்பதற்க்கான அளவீடாக எடுத்துக் கொண்டு பின் சரியில்லையெனில் கொலைவெறியேடு கெளம்பிடாதீங்க! என் பார்வையில் பார்க்ககூடிய "நல்ல" படம்,



அன்புடன்...
சரவணன்.