Wednesday, August 16, 2006

எனது கிராமம் -ஒரு ரவுண்டு போகலாமா!!!

வலைப்பதிவுகளில் குழுக்கள் அதிகமாகிவிட்டதால் புழுக்கம் அதிகமாகிவிட்டது என்று நண்பர் திரு.கோவி.கண்ணன் அவர்கள் வருத்தப்பட்டிருந்தார், எனது பார்வையிலும் இங்கே சாதீயப் பேச்சுக்களும்,ஒரு வித இறுக்கமும் அதிகமாக இருப்பது போல் தோன்றுகிறது, இவைகளில் இருந்து உங்களை ரிலாக்ஸ் பண்ணிக் கொள்ள எனது கிராமத்திற்க்கு "சாலி"யா ஒரு ரவுண்டு போகலாம் வாரீகளா..?


ஓபன் பண்ணின(தேவு கூட டிஸ்கசன்ல இருந்த பாதிப்புல இருந்து இன்னும் வெளிவர முடியல) ஊருக்குள்ள போன ஒடனேயே ஒரு பெரிய ஆறு, அதுல மேல பாக்குற படத்துல இருக்குற மாதிரி பெரிய பெரிய யானையெல்லாம் குளிக்கும், அப்படியே நடந்து ரோட்டுக்கு வந்தா ரெண்டு பக்கமும் சும்மா பச்சை பசேல்னு எங்கே பாத்தாலும் பசுமையான வயல்வெளிகள், ரோட்டோரம் எப்பவும் வத்தாம ஓடுர கிளைஆறு, பக்கத்து வயல்களில் நாத்து நடுர பெண்களின் தெம்மாங்குப் பாட்டு,இடை இடையே குயில்களின் இசை ஆவர்த்தனம் வேறு, அப்படியே "அழகியபாண்டிபுரம்" உங்களை அன்போடு வரவேற்கின்றது, என்று தங்க நிற போர்டு, அப்படினு கற்பனைல இருந்தீங்கன்னா சாரி....,

கொஞ்சம் குருதய விட்டு கீழ எறங்குங்க எங்க ஊர்"வளநாடு" வந்திடுச்சு,என்னது..? ஊரப் பாத்ததும் உடனே கெளம்புறீகளா, ஓ! நீங்க எதிர் பார்த்த மாதிரி இல்லாம இங்கன வெறும் கருவ மரமும்,கரிச காடும்,சோத்துக் கத்தாலையுமா இருக்கா? என்னப்பூ பண்ணூறது இந்த பூமிலதேன் எங்க பொறப்பு சாவு எல்லாம், இதுதேன் எங்களுக்கு கஞ்சி ஊத்துர பூமி, இதுதேன் எங்க சாமி,

அவுக திரும்பவும் கெளம்புறேனு சொல்லுராகளா..?சரிப்பு நல்ல படியா போய்ட்டு வா.., ஆனா பஸ் இன்னும் ஒரு 2 மணி நேரமோ,3 மணி நேரமோ கழிச்சி தான் வரும் அதுவரக்கும் அந்தா தெரியுது பாரு கருவ மரம் அங்கென போய் ஒதுங்கி நில்லு, வழக்கமான சாதிச் சண்டை "பஸ் எரிப்பு" இல்லைனா பஸ் வரும் , என்னது கூட்டமா அதெல்லம் ரெம்ப இருக்காதுப்பூ,டாப்புலயும் பஸ்ஸோட சைடிலயும்தேன் இந்தப் பள்ளிக்கூட பக்கிபுள்ளக தொங்கிட்டு வரும் உள்ள சீட்டெல்லம் உனக்கு சிலாவத்தா கெடைக்கும் கவலப்படாத...

சரி மத்தவுக வாங்க நம்ம போவொம், எங்க ஊர் வளநாடு எனும் கிராமம், இது பரமக்குடி-ராமேஸ்வரம் NH-49 ரோட்டுல இருக்குற சத்திரக்குடி என்னும் "சின்ன டவுன்"லிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது,இது முதுகுளத்தூர் தொகுதிக்கு உட்பட்டது(முதுகுளத்தூர் நியாபகம் இருக்கா..? திரு.அசுரன் மற்றும் திரு.செல்வன் ஆகியோர் தங்களின் சமீபத்திய பதிவிற்க்காக அடிக்கடி வந்து போன ஊர்).

எங்க ஊர்ல மொத்தம் 100 வீட்டுக்கும் கொறச்சலாத்தேன் இருக்கும் ஆமா,இதோ ஊரின் எல்லைல சோத்தாங்கைபக்கம் இருக்குறது கம்மாய்,

அங்க ஆம்பளைங்களுக்கும் பொம்பலைங்களுக்கும் தனித் தனியா ரெண்டு தொர இருக்கு,((யோய் ஜொள்ளு வாய மூடுயா பொம்பளைங்க தொரை-னு சொன்னாப் போதுமே அப்படியே வாயத் தொறந்துடிவியே)),

கம்மாக் கரயில் ஒரு கோவில் இருக்குது பாருங்க அது பிள்ளையார் கோவில்,(கோவில்னதும் "குமரனை" நினைத்து பாட்டு பாடனும்னு யாரும் "எஸ்கே"ப் ஆயிடாதீங்க ஊரச் சுத்திப் பார்த்ததும் அப்புறம் இங்க வரலாம்)

நொட்டங்கைப் பக்கம் இருக்குது பாருங்க கருவக் காடு அதானுங்க நாங்க ஒதுங்குற எடம்,
சரி இப்போ ஊருக்குல்லாற போவோம் அப்புறம் ஊர் சுத்தி முடிச்சிட்டு அடுத்த எல்லைப் பத்தி போசுவோம் சரியா..?

சரி வாங்க உங்க கை புடிச்சி எங்க ஊருல உள்ளவுக வீட்டுக்கெல்லம் கூட்டிட்டு போறேன்,வடக்குத்தெரு, நடுத்தெரு, தெக்குத்தெருனு 3 தெரு இருக்கு,மொதல்ல வடக்குத் தெருல இருந்து போவோம், ,ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு பட்டப் பேரு இருக்கு,


வடக்குத் தெரு வாலிபர்களைப் பார்ப்போம்...

பப்பூன் மாமா வீடு
கட்டப் பஞ்ஜாயத்து மாமா வீடு
சோவி வீடு*
கூலயன் வீடு
கொச வீட்டு பாலமுருகன் வீடு(குயவர் வீடு)
வைத்தியம்பிள்ளை வீடு
பாக்கியம்பிள்ளை வீடு
கொட்டைக்கார்ரு வீடு(கொட்டகை வீடு)
ஆசாரி வீடு
மீன்கார கலாஅக்கா வீடு
உள்ளாக்கு வீடு
பார்வகார்ரூ வீடு(வேப்பிள்ளையால் மந்திரித்து "பார்வை" பார்ப்பவர்)
காக்காயன் வீடு
வெரச்சூம்பி வீடு
சைக்கிள்கட நாடார் வீடு
வழிமரச்சான் கலப்புக் கட(எங்க ஊருல இருக்குற "பெரிய"டீ-க்கட)
பூச்சாண்டி வீடு
பல்லு வீரையா வீடு

*சோவி வீடு- தானுங்க நம்ம வீடு(இதப் பாத்துட்டு ஏதோ "சோவி"யத்துக்கும் எங்களுக்கும் தொடர்புனு நெனைச்சுடாதீங்க, முன்னோர்கள் சோவிமுத்து வச்சி விளையாடுவாங்களாம் அதான்)



அடுத்தாப்புல நடுத்தெரு நட்டாமுட்டீங்க பத்தி...

தலைவரு குருசாமி வீடு
கோணக்கழுத்து வீடு
வெறுகு வீடு
சண்டரிச்சா வீடு
கொசவீட்டு போஸ் வீடு
மூலிக்காலி வீடு
வண்ணவீட்டு கணேசன் வீடு

கடைசில தெற்குத்தெரு மச்சாங்க வீடு

கடைகார கூரி அண்ணன் வீடு
சேன வீடு
மொண்டாசு வீடு
தொட்டுநக்கி வீடு
கரம்ப வீடு
வாத்து வீடு
அழகர் வீடு
மசங்கி வீடு
மாக்கான் வீடு
கோடாங்கி வீடு
குச்சிக்காலு வீடு
குலும வீடு
மூக்கன் வீடு
மண்ணுவீடு
எலியன் வீடு
வடிவேல் வீடு

(கோடாங்கி வீட்டுல முத்துப் போட்டு க.பி.க எல்லாரும் எப்பக் கல்யாணம்னு தெரிஞ்சிக்கலாம், அப்படியே வேறு பெயர்களில் எழுதும் வலைப் பதிவர்கள் பற்றிய உங்களின் சந்தேகத்தையும் கேட்டுக்கறலாம்.)

ஒவ்வொரு வீட்டிலும் , பல சோகங்கள், சில சந்தோசங்கள், காதல்கள், ஓடிப் போன காதல், கள்ளக் காதல்,எல்லாம் உண்டு, இது எல்லாருக்குமே தெரியும், ஒரு வீட்டுல ஒன்னு நடந்துச்சுனா அது எல்லாருக்குமே ஒடனே தெருஞ்சுடும்,ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கருவாச்சி காவியம் எழுதுற அளவுக்கு கத இருக்கும்,ஒவ்வொரு கதையிலும் பலக் கிளைக் கதைகள் வேறு,

சரி தெருவெல்லாஞ் சுத்தியாச்சா வாங்க ரோட்ல இருக்குற கடகார கூரி அண்ணே கடயில் கலரு குடிப்போம்(உங்க "மனதின் ஓசை" 24% பூச்சி மருந்துனு சொல்லுதா, அதெல்லாம் ஒங்க டவுனு கலருலதாம்பூ, இதுநம்ம காளிமார்க், இங்கின இதுதேன் கெடைக்கும், இதத்தேன் நான்கலும் வருச முச்சூடும் குடிக்கிறேன்,) கடய ஒட்டுனாப்புல நாலஞ்சு ஆளுக்க படுத்துருக்ககா பாருங்க இதுதேன் "சங்கம்", இங்கதேன் பஞ்சாயத்துப் பூராம் நடக்கும்.(பஞ்சாயத்து நடக்குறதே பெரிய காமெடியா இருக்கும்)

இப்போ ஊரோட அடுத்த எல்லக்கு வந்தாச்சுப்பூ...அந்தா தெரியுது பாருங்க கட்டடம் அது பால்வாடி(எங்க ஊர் LKG,UGK) அதுக்குப் பக்கதுல இருக்கு பாருங்க பெரிய கட்டடம் அதுதேன் பள்ளிக்கூடம்(ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி), இன்கென தேன்ம்ப்பூ நா 5 ஆப்பு(ஆஹா.. இன்கேயும் ஆப்பா?) வரைக்கும் படிச்சேன்,


எங்கவூர்ல நீங்க படிச்ச மாறி இங்கிலீசு பள்ளிகொடம்லா இல்லப்பூ,இப்போதேன் சின்னப் புள்ளக் குட்டிக பூராம் ஆட்டோல போய் "புதுடவுனு" சத்தரக்குடில இங்கிலீசு படிக்கிதுக,

சரி பள்ளிக்கூடத்துலக்கும் கெழக்கால அந்தா தெரியுது பாருங்க அது கருசூரணி (இந்த ஊரணி பற்றிய ஒரு பதிவு இன்னும் டெவலப் பண்ணாம "save as Draft"ல இருக்கு)அப்படியே கொஞ்சம் தள்ளிப் பாருங்க பன மரம் தெரியுதா...

சரி பொம்பளைக எல்லோரும் அப்படியே வீட்டுக்குப் போங்க (பாத்துப் போங்க போர வழில கருவ முள்ளூம்,ஒட மரத்து முள்ளூம் இருக்கும்)நாங்க அப்படியே போய் கள்ளுக் குடிசிட்டு வர்றோம்,(கவிதாக்கா இந்த அணீலையும் கூட்டிடு போக்கா)

சரி இப்போ எல்லாரும் வீட்டுக்கு வந்தாச்சா, வாங்க, அம்மா கத்தரிவத்தல் புளிக்கொழம்பு வச்சிருக்காங்க,எல்லோரும் சாப்புடுவோம்,

சாப்டாச்சுல எல்லாரும் அப்படியே திண்ணைல கொஞ்ச நேரம் காத்தாட ஒக்காந்து பேசுவோம்,கிராமங்களின் சிறப்பே ஒற்றுமையாக கொண்டாடப்படும் விழாக்கள் தான்,மாரியம்மன் கோவில் மொழக்கட்டு,கிருஷ்ண ஜெயந்தி-மஞ்சத்தண்ணி,மாவிடியான் கோயில் திருவிழா, மடக்கிரயான் கோயில்,அய்யனார் கோயில் குருதஎடுப்பு, காளி கோயில் கலியாட்டம்னு நெரய அயிட்டம் இருக்குப்பூ, அதுலயும் ஒவ்வோரு விழாவுக்கும் நாடகம் வேற நடக்கும்,அதுல வர பப்பூன் காமிக்கு,பா(வை)வக்கூத்து அடாடா...
அதெல்லாம் "உண்மையாகவே"வாழ்ந்த காலங்கள்...

கம்மா அழியும் போது மீன் புடிக்க ஊர் சனங்க பூராம் கச்சாவ(யோஹன் உங்க ஊர்ல "கச்சாவுக்கு"என்ன பேருனு ஒரு ஆராய்ச்சிப் பதிவு ரெடி பண்ணுங்க) தூக்கிகிட்டு ஓடிவந்து ஒன்னா கூடுவாக,அதப் பாக்க அப்படியே திருவிழாக் கூட்டம் மாதிரித்தேன் இருக்கும், அதே மாதிரி கிராமத்து வெளையாட்டும் கிளித்தட்டு,ஒழிஞ்சிபிடிச்சு,போந்தா(பளிங்கி),கிட்டி,கல்லா மண்ணா அப்படினு அது ஒரு லிஸ்ட் இருக்கு, இதப் பத்தியும் தனிப் பதிவு உண்டு,


ஊரச் சுத்தி காமிச்சாச்சு,மணி 5:00 ஆச்சு அருப்புக் கோட்டையில இருந்து ரத்தினா(எங்க ஊருக்கு வரும் ஒரே தனியார் பேருந்து)வரும் அதுல போய்டுவோம் அப்படி இல்லைனா 6:30க்கு வர்ர 9C-ல போயிடலாம்,

அந்தா ரத்தினா வந்திடுச்சு கெளம்புவோமா...

என் கிராமத்திற்க்கு உங்கள் அனைவரையும் மகிழ்ச்சியோடு அழைத்து சென்றேன், நான் எழுதிய பதிவுகளில் இதுவே மிகவும் திருப்தியான பதிவாக கருதுகிறேன், இனி அடிக்கடி "இதுபோல்" திருப்தியடைய எண்ணியுள்ளேன்.
என் எழுத்து நடையில் ஏதேனும் தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும், அது இனி வரும் என் எழுத்துக்களை திருத்த உதவும்,
சரி எங்க ஊருக்கு வந்தீகளே எப்படி இருந்துச்சு கொஞ்சம் சொல்லிட்டு போங்க நணபர்களே...


(படங்கள் :- கூகுளாண்டவர் துணை)


அன்புடன்...
சரவணன்.

79 பின்னூட்டங்கள்:-:

said...

Super trip Sara....

Will come back again

said...

அட்டகாசம் போங்க.
வெய்யிலில் காய்கிற மிளகாய் "நெடி" அடிக்குதுங்க.
மென்மேலும் எழுத வாழ்த்துக்கள்.

said...

//ஒவ்வொரு வீட்டிலும் , பல சோகங்கள், சில சந்தோசங்கள், காதல்கள், ஓடிப் போன காதல், கள்ளக் காதல்,எல்லம் உண்டு, இது எல்லாருக்குமே தெரியும், ஒரு வீட்டுல ஒன்னு நடந்துச்சுனா அது எல்லாருக்குமே ஒடனே தெருஞ்சுடும்,ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கருவாச்சி காவியம் எழுதுற அளவுக்கு கத இருக்கும்,ஒவ்வொரு கதையிலும் பலக் கிளைக் கதைகள் வேறு,//

சரவணன்,
எழுத்தும் படைப்பும் அருமையாக இருக்கிறது ! இன்னுமொருமுறை சவகாசமாக படித்துவிட்டு திரும்ப வருகிறேன் !

நன்றி !

said...

பாரதிராஜா கொஞ்ச நாளா கிராமத்து படம் எடுக்காத குறைய தீர்த்துட்டிங்க.

சுகமா ஒரு ஊரை சுத்தி பார்த்த சந்தோஷம்!

கிராமத்து கிளிகளை பற்றி குறிப்பிடாததை வன்மையாக கண்டிக்கிறேன்.:-(

said...

உங்க வூர்லே கடகார கூரியண்ணே கடை கொஞ்சம் வித்தியாசமாய்த் தெரியுது.
ஹையா அந்த ஆள் கம்மாயிலேருந்து இந்தாசோட்டு மீன் வெறுங்கையாலே பிடிச்சாரா?
ரொம்ப நாளக்கப்புறம் ஒரு கிராமத்தை முழுதும் சுத்தின மாதிரி இருக்கு.

said...

யய்யா ஞானபண்டிதா,
கிராமத்து மணம் கமழுது. சூப்பரு.

said...

"வலைப்பதிவுகளில் குழுக்கள் அதிகமாகிவிட்டதால் புழுக்கம் அதிகமாகிவிட்டது என்று நண்பர் திரு.கோவி.கண்ணன் அவர்கள் வருத்தப்பட்டிருந்தார், எனது பார்வையிலும் இங்கே சாதீயப் பேச்சுக்களும்,ஒரு வித இறுக்கமும் அதிகமாக இருப்பது போல் தோன்றுகிறது, இவைகளில் இருந்து உங்களை ரிலாக்ஸ் பண்ணிக் கொள்ள எனது கிராமத்திற்க்கு "சாலி"யா ஒரு ரவுண்டு போகலாம் வாரீகளா..?"
சரவணா!
நீங்க சொல்லுவது சரி!; தமிழ் மணம் சூடாதான் இருக்குது! ஒங்க கையைப் பிடித்து ஊர்சுற்றியது; மிக ஆறுதலா இருக்கு! மிக அழகான கிராமம்; நம்ம யானையார் குளிப்பதையெல்லாம் பார்க்கலாமா? நீங்க உண்மையில் மிகக் கொடுத்து வைத்தவங்க! நம்ம ஈழத்தில் எங்க கிராமத்தில் குறிப்பாக யாழ் குடாநாட்டில் காணமுடியாது.படங்கள் பிரமாதம் பதிவுக்கு உயிர் கொடுத்துள்ளது. இதில் உள்ள இரு ஓவியங்களில் ஒன்று வெளிநாடா??? தயவு செய்து கச்சா என்பதை விளக்கவும்; என் ஆச்சரியமும் இவ்வளவு பெரிய மீனைக் வெறும் கையாலா?? பிடித்தாங்க!என் கிராமத்தில் எங்கள் வீட்டை "புளியடிப் பொன்னம்மாக்கா வீடு" என்றால் தான் தெரியும்.அது என் தாயார் பெயர். வீட்டுக்கு முன் பெரிய புளிநின்றது. அதன் வயது சுமார் 400 வருடம் இருக்குமெனக் கூறினார்கள்; போரால் விறகுத் தட்டுப்பாட்டால் ; தறித்து விட்டார்களாம். அதைக் கேள்விப்பட்ட போது; என் கண் கசிந்தது. 2004 சென்ற போது; தறித்தவர்களுடன் கதைக்க மனம் வரவில்லை. அவர்களை ஜென்மவிரோதியாக என் மனம் எண்ணுகிறது.அடிக்கடி கிராமம் காட்டுங்கள். என் போன்றோருக்கு ;இதமாக இருக்கும்;
யோகன் பாரிஸ்

said...

சரவணன், உங்க கிராத்தை எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சுங்க. நம்ம ஊருக்கு பக்கத்தில் இருக்கும் கிராமங்களுக்கு அடிக்கடி போகும் பழக்கம் உண்டு.
ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க. அனுபவித்து படிக்க முடிந்தது.

said...

அருமையான பதிவு சரவணன்.மறக்க முடியாத நினைவுகளை மறுபடியும் நினைக்க வைத்து விட்டீர்கள்.பதிவுகள் தொடரட்டும்.வாழ்த்துக்கள்.

said...

சரவணன்,


ஐய்யோ ஐய்யோ....... அட்டகாசமான பதிவு. நல்லா ஊரைச் சுத்திக் காட்டுனதுக்கு நன்றி.

ம்ம்ம் இப்பச் சொல்லுங்க. அந்த மொதப்படம் யானை குளிக்கிறது, படகு இதெல்லாம்
மெய்யாலும் எந்த ஊருன்னு?

said...

இந்தப் பதிவில் நான் பயன்படுத்தியிருக்கும் அனைத்துப் படங்களும் சுவாமிஜி.கூகுளானந்தாவிடமிருந்து பெற்றவையே,
எனது கிராமத்தைப் புகைப்படமெடுத்து கண்டிப்பாக ஒரு படப் பதிவு போடுவேன்.

அன்புடன்...
சரவணன்.

said...

தம்பீ..
நல்ல பதிவு..
ஆனாலும் இன்னும் கொஞ்சம் விவரனையா சொல்லி இருக்கலாம்.
அடுத்த பதிவுகளில் அது நடக்கும் என்று நம்புகிறேன்.
உள்ளுக்குள் ஆயிரம் குத்துக்கள் இருந்தாலும்...
எங்க ஆளுங்க மேல.. அக்கரை வச்சு..
//கோடாங்கி வீட்டுல முத்துப் போட்டு க.பி.க எல்லாரும் எப்பக் கல்யாணம்னு தெரிஞ்சிக்கலாம்// ன்னு நீ கொடுத்த ஆலோசனைகாகவே.. உன்னை க.பி.கழகத்தின் ஆலோசனை குழுவுல போடலான்னு நெனைக்கிறேன்.

வாழ்த்துக்கள்.

said...

தம்பீ..
நல்ல பதிவு..
ஆனாலும் இன்னும் கொஞ்சம் விவரனையா சொல்லி இருக்கலாம்.
அடுத்த பதிவுகளில் அது நடக்கும் என்று நம்புகிறேன்.
உள்ளுக்குள் ஆயிரம் குத்துக்கள் இருந்தாலும்...
எங்க ஆளுங்க மேல.. அக்கரை வச்சு..
//கோடாங்கி வீட்டுல முத்துப் போட்டு க.பி.க எல்லாரும் எப்பக் கல்யாணம்னு தெரிஞ்சிக்கலாம்// ன்னு நீ கொடுத்த ஆலோசனைகாகவே.. உன்னை க.பி.கழகத்தின் ஆலோசனை குழுவுல போடலான்னு நெனைக்கிறேன்.

வாழ்த்துக்கள்.

said...

சரவணன் இப்ப உங்களோட ஊர ஒரு ரவுண்டு விட்டாச்சு முதல்ல என்னோட கேள்விக்கு பதில் சொல்லுங்க
1.அந்த யானை யாரோடது?
2.அந்த தென்னைமரம் இருப்பதுதான் உங்க வீடா?
3. இந்த பஸ் ஒழுங்கா போய் சேந்துச்சா?
4. உங்க ஊர் பஞ்சாயத்து தலிவர் யாரு? காண்க்ரீட் ரோடு போட்டதை விளம்பரம் வக்கிறீங்க? சொந்த காரரா?
5. கரையில ஒரு பொடியன் காலை நீட்டி போட்டு சன்பாத் எடுக்கிறானே அது யார்?
6.உங்க ஊர் கோயில்ல கிடா வெட்டுவீங்க தானே? ஏன்னா இந்த மாதிரி அமைப்பு கோயில் எல்லாம் பொதுவா குலசாமிகள் அதுதான் கேட்டேன்.
7.தாத்தா காவல் காக்கிறாரா இல்லை ஏற்றமா அது (கமலை?) சரி அவரு எதாவது செய்யட்டும் நான் மீதி கேள்வியோட அப்புறமா வாரேன்

(ஒரு சின்ன வேண்டுகோள் உங்க பின்னூட்ட பெட்டி பாபப் சன்னலா இருகிறது பின்னூட்டம் போட கொஞ்சம் சிரமா இருக்கு அதை பதிவோட இருக்கிற மாதிரி மாதுவீங்களா?)

said...

Dev said...
//Super trip Sara....
Will come back again //

யோவ் தேவு! soon னு சொன்ன இன்னும் ஆளை இந்தப் பக்கத்துல காணோம்,

அன்புடன்...
சரவணன்.

said...

வடுவூர் குமார் said...

//அட்டகாசம் போங்க.
வெய்யிலில் காய்கிற மிளகாய் "நெடி" அடிக்குதுங்க.
மென்மேலும் எழுத வாழ்த்துக்கள்//

நன்றி வடுவூராரே!

உமது மிளகாய் "நெடி" எனது மூக்கிலும் நுளைந்து தும்மலை ஏற்படுத்தியதற்க்கு நன்றி!!!


அன்புடன்...
சரவணன்.

said...

கோவி.கண்ணன் said...

//இன்னுமொருமுறை சவகாசமாக படித்துவிட்டு திரும்ப வருகிறேன் !//


வாருங்கள் காத்திருக்கின்றேன்!


அன்புடன்...
சரவணன்.

said...

தம்பி said...

//பாரதிராஜா கொஞ்ச நாளா கிராமத்து படம் எடுக்காத குறைய தீர்த்துட்டிங்க.//

அப்படியா! ஆனா இதெல்லாம் கொஞ்சம் ஓவரா... இல்லை இல்லை ரெம்ப ஓவராவே எனக்கு படுகிறது.

//சுகமா ஒரு ஊரை சுத்தி பார்த்த சந்தோஷம்!//

எனது கிராமத்தை சுற்றிப் பார்த்து சந்தோசப் பட்ட தம்பிக்கு நன்றி!


//கிராமத்து கிளிகளை பற்றி குறிப்பிடாததை வன்மையாக கண்டிக்கிறேன்.:-( //

ஆஹா! தம்பி ஆரம்பிச்சிட்டியா?கிளிகளைக் குறிப்பிட்டிருந்தால் பதிவு மிக....வும் பெரியதாக ஆகியிருக்கும், எனவே தான் நான் பதிவிடவில்லை, ஆனால் அடுத்தடுத்து பதிவுகளில் கிளிகள் உண்டு,

அன்புடன்...
சரவணன்.

said...

abiramam said...

//Thanks Saravanan. You took me to my school days. We also used to play these games in my village.//

am really very happy about ur comment, keep reading all blogs in tamilmanam.


அன்புடன்...
சரவணன்.

said...

உங்க ஊர் பஞ்சாயத்து தலைவரிடம் சொம்பு இருக்கா ?

பதிவு அருமை தலைவா..

said...

sultan said...
//
உங்க வூர்லே கடகார கூரியண்ணே கடை கொஞ்சம் வித்தியாசமாய்த் தெரியுது. //

சுல்தான்! அனைத்துப் படங்களும் கூகிளில் இருந்து பெற்றப்பட்டவை, படத்தில் உள்ளதை போல் கூரியண்ணன் கடை இல்லை அது வழக்கம் போல் கிராம அடையாளத்துடன் தான் உள்ளது.

//ரொம்ப நாளக்கப்புறம் ஒரு கிராமத்தை முழுதும் சுத்தின மாதிரி இருக்கு. //

என் அழைப்பை ஏற்று என்னுடன் கிராமத்தை சுற்றியமைக்கு நன்றி

அன்புடன்...
சரவணன்.

said...

செந்தழல் ரவி said...
//உங்க ஊர் பஞ்சாயத்து தலைவரிடம் சொம்பு இருக்கா ?//

இல்லை ரவி! எனக்கு விவரம் தெரிந்த வரையில் படங்களில் மட்டுமே பார்த்திருக்கின்றேன்.ஒரு வேளை எனக்கு விவரம் தெரிவதற்க்கு முன் பயன்படுத்தியிருக்கலாம்,

//பதிவு அருமை தலைவா.. //


ஊர் சுற்றியமைக்கு நன்றி தலைவா!

அன்புடன்...
சரவணன்.

said...

Haranprasanna said...
//I want to write about my own villages of my childhood age. Thanks and regards. //

thanks for ur commenet about my blob.yaa sure u too write about ur villages ,

அன்புடன்...
சரவணன்.

said...

என் கேள்விக்கென்ன பதில் ?

said...

கைப்புள்ள said...

//யய்யா ஞானபண்டிதா,
கிராமத்து மணம் கமழுது. சூப்பரு. //


கிராமத்து மணத்தை சுவாசித்தமைக்கு நெம்ப டேங்ஸ் முருகேசு.

அன்புடன்...
சரவணன்.

said...

மகேந்திரன்.பெ said...
//
சரவணன் இப்ப உங்களோட ஊர ஒரு ரவுண்டு விட்டாச்சு முதல்ல என்னோட கேள்விக்கு பதில் சொல்லுங்க//

கேளுங்க மகி,

//1.அந்த யானை யாரோடது?//

சத்தியமா என்னொடதில்லை,ஒருவேளை படகுவீட்டுப் பொன்ஸ் அக்காவோட பழைய யானையா இருக்குமோ?

//2.அந்த தென்னைமரம் இருப்பதுதான் உங்க வீடா?//

எங்க ஊரில் தென்னை மரமே இல்லை, இரண்டே இரண்டு தான் உண்டு அதுவும் வயல்களூக்கு நடுவே உள்ள பம்புசெட்டில் தான் உண்டு.

//3. இந்த பஸ் ஒழுங்கா போய் சேந்துச்சா?//

அதெல்லாம் கரிகிட்டா இருகுமில்லை,இல்லைனா இருக்கவே இருக்கு நடராஜா ரோடுவேர்ஸ்,

//4. உங்க ஊர் பஞ்சாயத்து தலிவர் யாரு? காண்க்ரீட் ரோடு போட்டதை விளம்பரம் வக்கிறீங்க? சொந்த காரரா?//

எப்படிங்க மகி கரிகிட்டா கண்டுபோட்டுடீங்க?

//5. கரையில ஒரு பொடியன் காலை நீட்டி போட்டு சன்பாத் எடுக்கிறானே அது யார்?//

நம்ப!தொட்டுநக்கி தம்பி மொண்டாசா இருக்குமுனு நெனக்கிறேன்.

//6.உங்க ஊர் கோயில்ல கிடா வெட்டுவீங்க தானே? ஏன்னா இந்த மாதிரி அமைப்பு கோயில் எல்லாம் பொதுவா குலசாமிகள் அதுதான் கேட்டேன்.//

கிடா வெட்டாமலா.. அதிலும் "நாட்டுச் சரக்கப்" போட்டுட்டு அந்தக் கரிச் சாப்பாடு சாப்புடுறதுக்குல்ல ஒரு ரகளை நடக்குமே அடடா...

//7.தாத்தா காவல் காக்கிறாரா இல்லை ஏற்றமா அது (கமலை?) சரி அவரு எதாவது செய்யட்டும் //

சரி விட்டுருவோம் அவரை.

//நான் மீதி கேள்வியோட அப்புறமா வாரேன்//

வாங்க மகி, காத்திருப்பேன்.

மகி! இங்கு பதிவில் நான் பயன்படுத்திய அனைத்துப் படங்களும் கூகிளாண்டவரிடமிருந்து பெற்றவை.

//(ஒரு சின்ன வேண்டுகோள் உங்க பின்னூட்ட பெட்டி பாபப் சன்னலா இருகிறது பின்னூட்டம் போட கொஞ்சம் சிரமா இருக்கு அதை பதிவோட இருக்கிற மாதிரி மாதுவீங்களா?) //

கண்டிப்பாக மகிக்காக இது கூட பண்ணலைனா எப்படி,


என் அழைப்பை ஏற்று கிராமத்தை சுற்றிப் பார்த்த நண்பர் மகி அவர்களுக்கு நன்றி!

அன்புடன்...
சரவணன்.

said...

நடுவால இருக்கிர எல்லா போட்டாவுக்கும் பதில நீங்களே போட்டதால இப்ப கடைசியா இருக்கிர ரத்னா பஸ்.... இன்கயும் நானே பதில் சொல்றேன் அத்தனை பேரயும் ஏத்திகிட்டு போன ரத்னா பஸ் ஒழுங்கா போச்சான்னு கேட்டனே போயிடுச்சிங்க :))

said...

Johan-Paris said...
//
சரவணா!
நீங்க சொல்லுவது சரி!; தமிழ் மணம் சூடாதான் இருக்குது! ஒங்க கையைப் பிடித்து ஊர்சுற்றியது; மிக ஆறுதலா இருக்கு! மிக அழகான கிராமம்; //

என் கிராமத்தை சுற்றிவந்த அண்பு நண்பர் திரு.யோகன் அவர்களுக்கு நன்றி!


//நம்ம யானையார் குளிப்பதையெல்லாம் பார்க்கலாமா? நீங்க உண்மையில் மிகக் கொடுத்து வைத்தவங்க! நம்ம ஈழத்தில் எங்க கிராமத்தில் குறிப்பாக யாழ் குடாநாட்டில் காணமுடியாது.படங்கள் பிரமாதம் பதிவுக்கு உயிர் கொடுத்துள்ளது. //

அனைத்துப் படங்களும் கூகிளில் இருந்து சுட்டவை,ஆற்றில் யானைக்குளிக்கும் படத்தில் உள்ளது போல் கேரளாவில் பல கிராமங்களில் சர்வ சாதாரணமாகா பார்க்கலாம்.

//இதில் உள்ள இரு ஓவியங்களில் ஒன்று வெளிநாடா??? //

இருக்கலாம்.

//தயவு செய்து கச்சா என்பதை விளக்கவும்;//


நிச்சயமாக யோகன்!
கச்சா என்பது மீன் பிடிக்கப் பயன்படுத்தப் படும் ஒரு வலை போன்ற பொருள்,பார்ப்பதற்க்கு இந்த வண்ணத்த்ப் பூச்சி புடிக்க வைத்திருப்பார்களே அதே போன்ற வலைப்பின்னலுடன் இருக்கும்,(எனக்கு சரியாகா விளக்க இயலவில்லை என்றே நினைக்கின்றேன்) அதன் வாய்ப் பகுதி ஓவல் ஃசேப்பில் இருக்கும்,கண்மாயில் மீன் பிடிக்கும் போது இரண்டு கைகளாலும் கச்சாவை பிடித்து அரித்து மீன் பிடிப்பார்கள். அடுத்த முறை ஊருக்குப் போகும் போது அதை படம் எடுத்து வந்து உங்களுக்கு கண்டிப்பாக அனுப்புகின்றேன் !சரியாக விளக்கமுடியாமைக்கு மன்னிக்கவும்.

// வீட்டுக்கு முன் பெரிய புளிநின்றது. அதன் வயது சுமார் 400 வருடம் இருக்குமெனக் கூறினார்கள்;"புளியடிப் பொன்னம்மாக்கா வீடு" //


உங்களின் புளியமரத்துக் கதையைப் படித்ததும் மனதிற்க்கு மிகவும் கஸ்டமாகிவிட்டது யோகன்.

//அடிக்கடி கிராமம் காட்டுங்கள். என் போன்றோருக்கு ;இதமாக இருக்கும்;
யோகன் பாரிஸ் //

நிச்சயமா யோகன்!
என் கிராமத்திற்கு என் பழைய எண்ணங்களில் பயனிக்கும் போது உங்களையும் சக பயணியாக அழைத்துச் சொல்லுவேன்.



அன்புடன்...
சரவணன்.

said...

நிசமா வே இந்த மாதிரி பேரில ஆளுங்க இருக்காங்களா? :))

கொட்டைக்கார்ரு
கூலயன் வீடு
உள்ளாக்கு வீடு
காக்காயன் வீடு
வெரச்சூம்பி வீடு
வழிமரச்சான் கலப்புக் கட(எங்க பூச்சாண்டி வீடு
தொட்டுநக்கி வீடு
வாத்து வீடு
மாக்கான் வீடு
குச்சிக்காலு வீடு
எலியன் வீடு

கண்டிப்பா இதுக்கெல்லாம் பெயர்காரன் இருக்கும்ல?

said...

மகேந்திரன்.பெ said...
//நிசமா வே இந்த மாதிரி பேரில ஆளுங்க இருக்காங்களா? :))//

நிச்சயமா மகி! எனது ஊரில் என்னையும் சேர்த்து மொத்தம் மூனு சரவணன் கள், "சோவிவீட்டு"சரவணன் அப்படினாத்தான் என்னை அதிக்கப் படியானவர்களுக்குத் தெரியும், மற்ற சரவணன்கள்"உள்ளாக்குவீட்டு
"சரவணன்","எலியன்வீட்டு"சரவணன்.

//கண்டிப்பா இதுக்கெல்லாம் பெயர்காரன் இருக்கும்ல?
//

ஆமாம் மகி!அனைத்துப் பெயருக்குப் பின்னாலும் ஒரு கதை இருக்கும், அது தான் பெயர்க்காரணம். ஒவ்வொரு பெயருக்கும் ஒரு தனித் தனி பதிவு போடனும்,


அன்புடன்...
"சோவிவீட்டு" சரவணன்.

Anonymous said...

wonderful writings. i like to visit your village.
fine.

i hope toddy is healthy drink. hm

german visitor

said...

german visitor
//wonderful writings. i like to visit your village.
fine.



நன்றி அனானி(german visitor ), கண்டிப்பாக வாருங்கள், ur always welcome!

//i hope toddy is healthy drink. hm//

இதுக்குத் தான் என்ன அர்த்தம்னு தெரியலை,

அன்புடன்...
சரவணன்.

said...

நாகை சிவா said…

//சரவணன், உங்க கிராத்தை எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சுங்க.//

அப்படியா சிவா! எப்போ வர்ரீங்க?

//நம்ம ஊருக்கு பக்கத்தில் இருக்கும் கிராமங்களுக்கு அடிக்கடி போகும் பழக்கம் உண்டு.//

எதுக்குனு தெரிஞ்சிக்கலாமா...?:))))

//ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க. அனுபவித்து படிக்க முடிந்தது.//

என் கிராமத்திற்க்கு வந்து அனுபத்து சுற்றிய அன்பு நண்பர் சிவாவிற்க்கு நன்றி!


அன்புடன்...
சரவணன்.

said...

(துபாய்) ராஜா said...

//அருமையான பதிவு சரவணன்.மறக்க முடியாத நினைவுகளை மறுபடியும் நினைக்க வைத்து விட்டீர்கள்.பதிவுகள் தொடரட்டும்.வாழ்த்துக்கள்//


ராஜா உங்களின் "நினைவுகளை" நியாபகப்படுத்தியதற்க்காக சந்தோசப் படுகின்றேன். என்னுடன் சேர்ந்து எனது கிராமத்தை வலம் வந்தமைக்கு நன்றி நண்பனே!


அன்புடன்...
சரவணன்.

said...

நாகைக்கு அருகில் இருக்கும் பொய்கை நல்லூர்(வடக்கு, தெற்கு), பாப்பாகோவில், தெத்தி, திருக்குவளை, வடவூர் இப்படினு ஏகப்பட்ட இடம் இருக்குப்பா. ஏத விட ஏத சொல்ல.... இதுல பொய்கை நல்லூரில் ரொம்பவே சேட்டை செய்து இருக்கோம்.

said...

கலக்கல் நண்பா..

உன் ஊரை சுத்தி பாத்துட்டு எனக்கு ஒரே பீலிங்ஸ் ஆப் இண்டியாவா இருக்கு..

//எனது ஊரில் என்னையும் சேர்த்து மொத்தம் மூனு சரவணன் கள், "சோவிவீட்டு"சரவணன் அப்படினாத்தான் என்னை அதிக்கப் படியானவர்களுக்குத் தெரியும், மற்ற சரவணன்கள்"உள்ளாக்குவீட்டு
"சரவணன்","எலியன்வீட்டு"சரவணன்.
//

இந்த பிரச்சினை எனக்கும் உண்டு..என் சொந்த கிராமத்திலும் என் பெயரில் 6,7 பேர் இருக்கிறார்கள் (ஊர்ல அத்தனை பேரும் கப்பி பயலுகளான்னு கேக்கப்படாது...என் சொந்த பேரைச் சொல்லுறேன்)

மெத்தைவீட்டு X, பொடிகார X, பால்கார X, மணியக்கார X இப்படி...

அங்க போனா நான் 'காஞ்சிபுரத்தான் X' ஆயிடுவேன் :)

said...

//இது பரமக்குடி-ராமேஸ்வரம் NH-47 ரோட்டுல இருக்குற சத்திரக்குடி என்னும் "சின்ன டவுன்"லிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது//

NH-47 என்பது சேலத்திலிருந்து கொச்சி வரை கோயமுத்தூர் வழியாக சொல்லும் சாலை. NH-7 சேலத்திலிருந்து மதுரை, திருவனந்தபுரம் வழியாக கொச்சியில் NH-47 உடன் சேரும். சேலத்திலிருந்து கேரளா பார்டர் வரை உள்ள சாலையை நான்கு வழிப்பாதையாக மாற்றும் வேலைக்கான ஆரம்பக்கட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

உங்க ஊருல வர்ரது வேறயா இருக்கலாம்.

said...

நாகை சிவா said...

//ஏத விட ஏத சொல்ல.... இதுல பொய்கை நல்லூரில் ரொம்பவே சேட்டை செய்து இருக்கோம்.//

பொய்கை நல்லூர் ஆசாமிங்க யாராவது இருக்கீங்களா? இந்த புலி பண்ணிய அட்டகாசத்தை கொஞ்சம் சொல்லுங்களேன்.


அன்புடன்...
சரவணன்.

said...

கப்பி பய said...

//உன் ஊரை சுத்தி பாத்துட்டு எனக்கு ஒரே பீலிங்ஸ் ஆப் இண்டியாவா இருக்கு..//

இனி அடிக்கடி ஃபீல் பண்ணனும் கப்பி!


//மெத்தைவீட்டு X, பொடிகார X, பால்கார X, மணியக்கார X இப்படி...
அங்க போனா நான் 'காஞ்சிபுரத்தான் X' ஆயிடுவேன் :) //

கடைசிவர இந்தக் கப்பிப்பய பெயரை சொன்னானானு பாத்தீங்களா..?
கோடாங்கி முத்துப் போட்டு சொல்லு கப்பிப் பய உண்மையான பேரு என்னனு..?



அன்புடன்...
சரவணன்.

said...

Saravanan, Super !! கண்ணுக்கு குளிர்ச்சியா இருந்தது..நன்றி

said...

கலக்கல் சரவணன்.. இத்தனை நாள் பார்க்காம விட்டுட்டேனே.. நல்ல கிராமம்.. :)

said...

Udhayakumar said...

//சேலத்திலிருந்து கேரளா பார்டர் வரை உள்ள சாலையை நான்கு வழிப்பாதையாக மாற்றும் வேலைக்கான ஆரம்பக்கட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.//

மன்னித்துக் கொள்ளுங்கள் உதயகுமார்! எனது ஊர் NH-49,உங்களின் அனுமதியுடன் என் பதிவிலும் திருத்திக் கொள்கின்றேன், தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!

என் கிராமத்தை சரியான ரோட்டில் சுற்றிப் பார்த்த அன்பு நண்பர் திரு.உதயகுமார் அவர்களுக்கு நன்றி!

அன்புடன்...
சரவணன்.

said...

கவிதா said...

//Saravanan, Super !! கண்ணுக்கு குளிர்ச்சியா இருந்தது..நன்றி //

கவிதா அக்கா!
நீங்கள் கூறியது மனதிற்க்கு குளிர்ச்சியாக உள்ளது(கூரியண்ணன்கட கலரு போல)!,
வருத்தங்கள் விட்டு, அணீலுடன் வந்து ஊர் சுற்றிப் பார்த்தமைக்கு நன்றி!


அன்புடன்...
சரவணன்.

said...

பொன்ஸ் said...

//கலக்கல் சரவணன்.. இத்தனை நாள் பார்க்காம விட்டுட்டேனே.. நல்ல கிராமம்.. :) //


இருக்கட்டும் அக்கா!
இப்பொழுது தானே இந்தியா வந்துள்ளீர்கள், அதான் என் கிராமத்திற்க்கு கொஞ்சம் லேட்டா வந்தீங்க போல, பரவாயில்லை!
என் கிராமத்தை சுற்றிப் பார்க்க லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்த பொன்ஸ் அக்காவிற்க்கு நன்றி!


அன்புடன்...
சரவணன்.

said...

துளசி கோபால் said...

//அந்த மொதப்படம் யானை குளிக்கிறது, படகு இதெல்லாம்
மெய்யாலும் எந்த ஊருன்னு? //

உண்மையாகவே எனக்குத் தெரியாது! அனைத்தும் கூகுளில் இருந்து பெற்ப்பட்டவை!

//சரவணன்,
ஐய்யோ ஐய்யோ....... அட்டகாசமான பதிவு. நல்லா ஊரைச் சுத்திக் காட்டுனதுக்கு நன்றி.//

ஐய்யோ ஐய்யோ...என்று சந்தோசமாக எனது கிராமத்தை சுற்றிய அக்கா துளசி அவர்களுக்கு நன்றி!

அன்புடன்...
சரவணன்.

said...

துளசி கோபால் said...

//உங்க பதிவை 'தேசி பண்டிட்'லே லிங்க் செஞ்சிருக்கேன்.
http://www.desipundit.com/category/tamil/
//

என் போன்ற புதிய வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் தங்களின் முயற்ச்சிக்கு நன்றி!
இது எனது கிராமத்திற்க்கு கிடைத்த அங்கீகாரமாகவே கருதுகின்றேன்.

அன்புடன்...
சரவணன்.

said...

உங்க ஊர்ல எல்லாமே நல்லா இருக்குங்க...

இந்த மாரியம்மன் திருவிழா, மஞ்சத்தண்ணித் ;)) திருவிழா எல்லாம் கிடையாதா???

said...

அருட்பெருங்கோ said...

//உங்க ஊர்ல எல்லாமே நல்லா இருக்குங்க...//

என் கிராமத்தை சுற்றிப் பார்த்த அன்பு கவிதை நண்பர் திரு. அருட்பெருங்கோ
-விற்க்கு நன்றி!

//இந்த மாரியம்மன் திருவிழா, மஞ்சத்தண்ணித் ;)) திருவிழா எல்லாம் கிடையாதா??? //

கண்டிப்பா உண்டு! ஆனால் பதிவு ரெம்ம்ம்...ப பெரியதாகிவிடும் என்பதால் அதைப் பற்றி விரிவாக எழுத இயலவில்லை! அதெல்லாம் தனித் தனி பதிவுகளில் வரும்.
(பின்ன எப்படி பதிவுகளின் எண்ணிக்கையை ஏத்துறதாம்)!


அன்புடன்...
சரவணன்.

said...

யெஸ்.பாலபாரதி said...

//நல்ல பதிவு..
ஆனாலும் இன்னும் கொஞ்சம் விவரனையா சொல்லி இருக்கலாம்.
அடுத்த பதிவுகளில் அது நடக்கும் என்று நம்புகிறேன்.
//


நிச்சயம் நீங்கள் நம்புவது போல் விவரமாக அடுத்து பல "கிராமிய" பதிவுகள் உண்டு!

//உள்ளுக்குள் ஆயிரம் குத்துக்கள் இருந்தாலும்...//


ஹி... ஹி... அதெல்லாம் இல்லாமலா?

//உன்னை க.பி.கழகத்தின் ஆலோசனை குழுவுல போடலான்னு நெனைக்கிறேன்.//


நிச்சயமா!
தங்களின் சித்தம், என் பாக்கியம்!


அன்புடன்...
சரவணன்.

said...

சரா... உங்கள் கிராமம் ..!
ஒரு ரவுண்டு என்ன 100 ரவுண்டு போகலாம்!!!

படங்களும் செய்திகளும் சுவையாக இருக்கிறது.. ஆற்றில் குளியல், மீன் பிடித்தால்... எல்லாமே நெஞ்சை அள்ளுகிறது... அழகிய கிராமம்

அடுத்து அவுட்டோர் சூட்டிங்குக்கு ஒங்க கிராமத்தை ரெகமென்ட் பண்ணலாம் :))

said...

கோவி.கண்ணன் [GK] said...
//சரா... உங்கள் கிராமம் ..!
ஒரு ரவுண்டு என்ன 100 ரவுண்டு போகலாம்!!!//

அப்படியா! சந்தோசம்,


//படங்களும் செய்திகளும் சுவையாக இருக்கிறது.. ஆற்றில் குளியல், மீன் பிடித்தால்... எல்லாமே நெஞ்சை அள்ளுகிறது... அழகிய கிராமம்//


கிராமத்தை சுற்றியமைக்கு நெம்ப டேங்ஸ்!

//அடுத்து அவுட்டோர் சூட்டிங்குக்கு ஒங்க கிராமத்தை ரெகமென்ட் பண்ணலாம் :)) //

வாங்க கோவி! ஜாமாய்ச்சிடலாம்!


ரயிலையும் மயிலையும் அழைத்து வரருவதாக சொன்னீர்களே!,

ரயில் நம்ப மகி ஓகே,
மயில் SKவாக இருந்தால் சந்தோசம், இல்லை வேறு எதாவது மயிலா?:))))))


அன்புடன்...
சரவணன்.

said...

//ரயில் நம்ப மகி ஓகே,
மயில் SKவாக இருந்தால் சந்தோசம், இல்லை வேறு எதாவது மயிலா?:))))))


அன்புடன்...
சரவணன். //

சரா ...!
உங்களுக்கு வேற மயிலு நெனப்பு வேறயா ? ம்ம்ம் ... கண்டிச்சு வளக்கவில்லை :(

:)))))

said...

இன்னைக்கு சனிக்கிழமை தானே, free-யா இருந்தா அப்படியே வாங்களேன் கிராமத்தை ஒரு ரவுண்டு அடிக்கலாம்!


அன்புடன்...
சரவணன்.

said...
This comment has been removed by a blog administrator.
said...

It is really nice to tour your village in native language. I do not know technical details how you made in tamil. But I appreciate it and keep it up. If possible contact me over phone.
R. Kuppuraj, Administrative Officer
Govt ITI Coimbatore
Phone: 9442183907
Thank you.

said...

//It is really nice to tour your village in native language.//
// But I appreciate it and keep it up//

thanks sir!

//If possible contact me over phone.
R. Kuppuraj, Administrative Officer
Govt ITI Coimbatore
Phone: 9442183907
Thank you.//

thank you sir!
surely i wil call u today night!

என் கிராமத்தை சுற்றிப் பார்த்த நண்பர் திரு.குப்புராஜ் அவர்களுக்கு நன்றி!


அன்புடன்...
சரவணன்.

said...

நான் இப்போ தான் திரு.குப்புராஜ் சாருக்கு ஃபோன் பண்ணினேன், அவரு அனைத்தையும் ரசித்ததாக கூறினார்.

கூல் டிரிங்ஸ் என்னங்க மகி!

நான் வழக்கமா சனிக்கிழமைகளில் பீர் சாப்பிடுவேன், வாங்களேன் அப்படியே ரெண்டு போரும் போய்ட்டு வரலாம்!, நான் கிழம்புறேன், அங்க வந்து joint பண்ணிக்கோங்க! வர்ர்ட்டா!
திரும்பி வந்ததும் உங்களுக்கு பதிவிடுவேன்! காத்திருக்கவும்!
will meet soon!

அன்புடன்...
சரவணன்.

said...

என்ன கொடுமை சரவணன் நான் வர்றத்துக்குள்ள ஆட்டம் முடிஞ்சிடுச்சா ...!

அதான் நண்பர் உடையான் பின்னூட்டத்துக் அஞ்சான் என்று சொல்றாங்களா (யாரு ?)

ஒன் டே மேட்சில் சரியாக பந்து வீசிய மகி..., மற்றும் விளாசித்தள்ளிய சரா ... ஆக மேட்சி அற்புதம் !

உன் ஜாய், என் ஜாய் ... எஞ்ஜாய் !

:))

said...

கோவி.கண்ணன் [GK] said...
//என்ன கொடுமை சரவணன்//
நான் வர்றத்துக்குள்ள ஆட்டம் முடிஞ்சிடுச்சா ...!//

இந்த சீனுக்கு ஒன்னியும் கொரச்சல் இல்லை!

//அதான் நண்பர் உடையான் பின்னூட்டத்துக் அஞ்சான் என்று சொல்றாங்களா (யாரு ?)//

கர்....... புர்........

//ஒன் டே மேட்சில் சரியாக பந்து வீசிய மகி..., மற்றும் விளாசித்தள்ளிய சரா ... ஆக மேட்சி அற்புதம் !//

உண்மை!

//உன் ஜாய், என் ஜாய் ... எஞ்ஜாய் !//


பார்க்கலாம் அடுத்த பதிவில்!


அன்புடன்...
சரவணன்.

said...

ஆவத்தியான் வீடு,
பட்டாளத்தான் வீடு,
கடச்சாவி வீடு,
மோடுமுட்டி வீடு,
மாட்டுக்காரன் வீடு,
கோழிமுட்டை வீடு,
கோணல் வீடு....

எங்கூர்லயும் இருக்கதப்பு ஏராளம் பட்டப்பேரு..

நண்பா..ரொம்ப ஜோரா இருந்துச்சு...தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள்..

said...

அன்பிற்குரிய சரவணன்,

உங்கள் ஊர் பற்றிய பதிவை முன்னாலே பார்த்துப் படித்துவிட்டேன். பின்னூட்டு அளிக்காது போனதிற்கு மன்னியுங்கள். வேறொன்றும் இல்லை. இன்னும் ஓரிரண்டு படித்தபின் எழுதலாம் என்ற எண்ணம் தான்.

உடன் இட்டிருந்த ஒளிப்படங்களை கூகிளில் இருந்து சுட்டிருந்தால் அதை உங்கள் பதிவிலேயே தெரிவித்திருக்கலாம். கூடியமட்டும் நம்மூர் பற்றி எழுதும் போது நம்மூர்ப் படங்களே இருக்க வேண்டும். திரைப்படக் காரர்கள் வேண்டுமானால், கோவை என்று சொல்லிக் காரைக்குடியைக் காட்டிக் கொண்டு இருப்பார்கள். இல்லை என்ரால் பொள்ளாச்சியைக் காட்டிக் கொண்டிருப்பார்கள். நாம் உள்ளதை அப்படியே காட்டுவோமே! நம்மூர்கள் பாலை தானே? அதில் ஒரு அழகு இருக்கிறது தானே?

உங்கள் நடை சிறக்கிறது. அங்கங்கே வரும் "பண்ணு" தமிழைக் கூடியமட்டும் குறைக்கப் பாருங்கள். இல்லையென்றால் பண்ணுகிற வேலை கொஞ்சம் கொஞ்சமாய் உங்கள் எழுத்தில் கூடிக் கொண்டே வரும். அப்புறம் அது தமிழாக இருக்காது.

சோழி சோகி ஆகிப் பின் சோவி ஆகிற்று. சோழிகளைப் பற்ற், சங்குகளைப் பற்றி, கிளிஞ்சல்களைப் பற்றி, உங்களுக்கு அருகில் உள்ள கடற்கரை (அழகன் குளம் வருமா?) அழகைப் பற்றி ஒரு பதிவு போடுங்கள்.

ஒருக்காலும் உங்கள் மண்ணின் மரபுகளைத் தொலைக்காதீர்கள்.

வாழ்க! வளர்க!

அன்புடன்,
இராம.கி.

said...

ஆழியூரான் said...

//ஆவத்தியான் வீடு,
பட்டாளத்தான் வீடு,
கடச்சாவி வீடு,
மோடுமுட்டி வீடு,
மாட்டுக்காரன் வீடு,
கோழிமுட்டை வீடு,
கோணல் வீடு....
எங்கூர்லயும் இருக்கதப்பு ஏராளம் பட்டப்பேரு..
//

ஆஹா! சூப்பரப்பூ!
இதுலயே எனக்கு மேடுமுட்டிவீடும்,கடச்சாவி வீடும் ரெம்ப புடிச்சிருக்கு!
ஆமா... உங்க வீடு எது?


//நண்பா..ரொம்ப ஜோரா இருந்துச்சு...தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள்.. //

உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி!
அப்படியே உங்க ஊரப் பத்தியும் ஒரு பதிவு போட்டு எங்க எல்லோரையும் ஓட்டிட்டு போகலாம்ல?

எனது அழைப்பை ஏற்று என்கிராமத்தை ஜோராக சுற்றி வந்த அன்பு நண்பர் திரு.ஆழியூரானுக்கு நன்றி!



அன்புடன்...
சரவணன்.

said...

இராம.கி said...
//அன்பிற்குரிய சரவணன்,
உங்கள் ஊர் பற்றிய பதிவை முன்னாலே பார்த்துப் படித்துவிட்டேன். பின்னூட்டு அளிக்காது போனதிற்கு மன்னியுங்கள். //

ஐயா! தாங்கள் வந்து பார்த்ததே எனக்கு சந்தோசம்,பொருமை!பெரியவங்க எங்கிட்ட மன்னிப்புனு சொல்லி என்னை தர்மசங்கடப்படுத்த வேண்டாம்!


//உடன் இட்டிருந்த ஒளிப்படங்களை கூகிளில் இருந்து சுட்டிருந்தால் அதை உங்கள் பதிவிலேயே தெரிவித்திருக்கலாம்.//

(படங்கள் :- கூகுளாண்டவர் துணை)

-என்று எனது பதிவின் கடைசியில் குறிப்பிட்டிருந்தேன் ஐயா!

// கூடியமட்டும் நம்மூர் பற்றி எழுதும் போது நம்மூர்ப் படங்களே இருக்க வேண்டும். திரைப்படக் காரர்கள் வேண்டுமானால், கோவை என்று சொல்லிக் காரைக்குடியைக் காட்டிக் கொண்டு இருப்பார்கள். இல்லை என்ரால் பொள்ளாச்சியைக் காட்டிக் கொண்டிருப்பார்கள். //

எனக்கும் நமது ஊரைக் காட்ட வேண்டும் என்று ஆசைதான், ஆனால் புகைப்படங்கள் என்னிடம் இல்லை!
(விரைவில் கிராமத்தின் புகைப்படங்கள் மட்டும் ஒரு தனிப் பதிவு போடலாம் என்று எண்ணியுள்ளேன்!)
அதனால் மட்டுமே நான் கூகிளின் துணையை நாடினேன்!

//நாம் உள்ளதை அப்படியே காட்டுவோமே! நம்மூர்கள் பாலை தானே? அதில் ஒரு அழகு இருக்கிறது தானே?//

கண்டிப்பாக ஐயா! நமது ஊர்
(நீங்களும் "இராம"நாதபுர பகுதியைச் சேர்ந்தவர் என்று உங்களின் படைப்புகளின் மூலம் படித்துள்ளேன்)வரண்ட பூமியானாலும் அது ஒரு அழகுதான் !

//உங்கள் நடை சிறக்கிறது. //

மிக்க நன்றி ஐயா!

//அங்கங்கே வரும் "பண்ணு" தமிழைக் கூடியமட்டும் குறைக்கப் பாருங்கள். இல்லையென்றால் பண்ணுகிற வேலை கொஞ்சம் கொஞ்சமாய் உங்கள் எழுத்தில் கூடிக் கொண்டே வரும். அப்புறம் அது தமிழாக இருக்காது. //

நிச்சயமாக, இனி எனது எழுத்துக்களில் இது போன்ற தவறுகளை குறைத்துக் கொள்கின்றேன்,

//சோழி சோகி ஆகிப் பின் சோவி ஆகிற்று. //

அப்படியென்றால் என் மூத்தோர்கள் சோலி இல்லாமல் சும்மா இருந்திருக்கும் போது சோழி வைத்து விளையாண்டிருப்பர்கள் போல..!

//சோழிகளைப் பற்ற், சங்குகளைப் பற்றி, கிளிஞ்சல்களைப் பற்றி, உங்களுக்கு அருகில் உள்ள கடற்கரை (அழகன் குளம் வருமா?) அழகைப் பற்றி ஒரு பதிவு போடுங்கள்.//


அழகன்குளம் பற்றி கேள்விப்படிருக்கின்றேன்!"சுவாட்ஸ்" பள்ளியில் படிக்கும் போது அழகன்குளம் நண்பர்கள் பலர் படித்தனர்.பதிவு போடுமளவுக்கு எனக்கு கடற்க்கரை பகுதி அவ்வளவாக பரிச்சயம் இல்லை! கிராமத்தைப் பற்றி அதிகப் பதிவுகள் போட முயல்கிறேன்!

//ஒருக்காலும் உங்கள் மண்ணின் மரபுகளைத் தொலைக்காதீர்கள்.//

நிச்சயமாக!
நமது மண்ணின் மரபுகளையும், மண்ணின் மணத்தையும் என்று என் நினைவில் வைத்திருப்பேன்!

//வாழ்க! வளர்க!

அன்புடன்,
இராம.கி. //

எனது அழைப்பினை ஏற்று கிராமத்தைச் சுற்றிப் பார்த்து பின் பயனுள்ள பல கருத்துக்களைக் கூறிய அன்பு ஐயா திரு.இராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி!


அன்புடன்...
சரவணன்.

said...

//பொய்கை நல்லூர் ஆசாமிங்க யாராவது இருக்கீங்களா? இந்த புலி பண்ணிய அட்டகாசத்தை கொஞ்சம் சொல்லுங்களேன். //
ஏனப்பா, என்ன பார்த்தா அட்டகாசம் பண்ணுற மாதிரியா இருக்கு. நான் ரொம்ப அமைதியான ஆளுப்பா. யாராவது அட்டகாசம் பண்ணினா கூட அதை கண்டு ஒதுங்கி போற ஆளு.
அதனால தான் பாரு, இங்கன பின்னூட்ட அட்டகாசங்கள் நடக்கும் போது கூட நான் ஒதுங்கி போயிட்டு அட்டகாசம் எல்லாம் அடங்கின பிறகு பொறுமையாக வருகின்றேன்.

said...

//கடைசிவர இந்தக் கப்பிப்பய பெயரை சொன்னானானு பாத்தீங்களா..?
கோடாங்கி முத்துப் போட்டு சொல்லு கப்பிப் பய உண்மையான பேரு என்னனு..?//
என்ன கேளு நான் சொல்லிட்டு போறேன். இதுக்கு எதுக்கு கோடாங்கி முத்துவ எல்லாம் கூப்பிடுற....
என்ன கப்பி போட்டு உடைச்சிடவா. இல்ல அந்த கயல் மேட்டர சொல்லுறியா

said...

அன்பிற்குரிய சரவணன்,
ரொம்ப நாளா இந்த பதிவுக்கு ஒரு பின்னூட்டம் போடனும்னு நெனச்சு கிட்டே இருந்தேன். இப்போதான் அதுக்கு ஒரு நேரம் கிடைச்சு இருக்கு.
இந்தப்பதிவு அருமை, பல விஷயங்களை ஞாபகப்படுத்தி இருக்கிறதே இந்தப்பதிவோட வெற்றிதான். நானும் ஒரு கிராமத்தில் இருந்து வந்த்தால் சொல்கிறேன், ஒரு நாள் கிராமத்தில வாழ்ந்த திருப்தி உண்டாகியிருச்சு. படங்களை கூகிளாண்டவர் குடுத்து இருந்தாலும் அதுக்கு உயிர் குடுத்த விதம் மிக அருமை. கண்டிப்பா என்னோட கிராமத்தை படம் எடுத்து இப்படி ஒரு பதிவு போடனுங்க. (டிஸ்கி-சரா).

தப்பா எடுத்துக்கலைன்னா ஒன்னு சொல்றேங்க. நல்ல பதிவை இப்படி கெளதமி,பரட்டைன்னு எல்லாம் பின்னூட்டம் போட்டு முகம் சுழிக்கிற மாதிரி இருக்குங்க. பதிவு அருமையா இருந்துச்சு, பின்னூட்டம் படிக்க ஆரம்பிச்ச பிறகு அந்தப்பதிவின் சாராம்சமே போயிருச்சு. இதை சொல்றதக்கும் மன்னித்துக்குங்க.
இது மாதிரி இன்னும் நிறைய பதிவு போடனும்னு கேட்டுக்கிறேன்.

said...

//என்ன கேளு நான் சொல்லிட்டு போறேன். இதுக்கு எதுக்கு கோடாங்கி முத்துவ எல்லாம் கூப்பிடுற....//

அப்படியா சிவா! எங்கே சொல்லுங்களேன் பார்ப்போம்!:)))

//என்ன கப்பி போட்டு உடைச்சிடவா. இல்ல அந்த கயல் மேட்டர சொல்லுறியா//

ஆஹா.... புலி கைவசம் நெறையா மேட்டர் இருக்குது போல!


அன்புடன்...
சரவணன்.

said...

ILA(a)இளா said...

//இந்தப்பதிவு அருமை, பல விஷயங்களை ஞாபகப்படுத்தி இருக்கிறதே இந்தப்பதிவோட வெற்றிதான். //

மிக்க நன்றி இளா!

//நானும் ஒரு கிராமத்தில் இருந்து வந்த்தால் சொல்கிறேன், ஒரு நாள் கிராமத்தில வாழ்ந்த திருப்தி உண்டாகியிருச்சு. //

அப்படியா...! ரெம்ப சந்தோசம்!

//தப்பா எடுத்துக்கலைன்னா ஒன்னு சொல்றேங்க.//

கண்டிப்பா...!சொல்லுங்க நண்பா!

//நல்ல பதிவை இப்படி கெளதமி,பரட்டைன்னு எல்லாம் பின்னூட்டம் போட்டு முகம் சுழிக்கிற மாதிரி இருக்குங்க. பதிவு அருமையா இருந்துச்சு, பின்னூட்டம் படிக்க ஆரம்பிச்ச பிறகு அந்தப்பதிவின் சாராம்சமே போயிருச்சு.இதை சொல்றதக்கும் மன்னித்துக்குங்க.
//

நான் செய்த தவறுக்கு நீங்கள் தான் என்னை மன்னிக்கவேண்டும்!என் போன்ற புதிய வலைபதிவாளனின் பதிவை படித்து அதன் தவறுகளை சுட்டிக் காடியமைக்கு நன்றி! இனி இதே மாதிரி தவறு நடக்காது.
இதே கருத்தை தங்களைத் தவிர சில வலை நண்பர்களும் எனக்கு மின்ஞ்சல் செய்திருந்தனர். எனது கிராம நண்பர்களும் தொலைபேசியில் இதை சுட்டிக்காட்டினர். எனவே முகம் சுளிக்கும் வகையில் இருந்த பின்னூட்டங்கள் நீக்கப்பட்டன!

//இது மாதிரி இன்னும் நிறைய பதிவு போடனும்னு கேட்டுக்கிறேன்.//

நிச்சயம்! இளா இனி அதிகமான "நல்ல" பதிவுகள் போட முயல்வேன்!

என் கிராமத்திற்க்கு "தனிவாகனத்தில்" வந்து சுற்றிப் பார்த்தது மட்டுமின்றி "சிறந்த விவசாயம் பண்ணுவது எப்படி?" என என் கிராம மக்களுக்கு ஒரு கருத்தரங்கு நடத்திக் கொடுத்த அன்பு அண்ணன் திரு. "விவ்" இளா அவர்களுக்கு நன்றி!


அன்புடன்...
சரவணன்.

said...

/./
அப்படியே போய் கள்ளுக் குடிசிட்டு வர்றோம்,
/./

பனை மரம் ஏறிய அனுபவம் உண்டா??
இல்ல நான் ஏறி.......

said...

Dear Saravan,

Thank you for instant reply by mobile on 19th Aug 2006. I wanted to note your number and web address but due to the pressure of work, I forgot to record them. And after a week, when I wanted to contact you I could not recollect your web I mean blog address and tried in vain. Just now, I got it in google search. Thank God.
I once again happily read your article with great happiness and your way of expression is simple and native.
In your reply, you suggested to use ekalappai. I downloaded it. But I do not know how to use it.
If you are free and find time, please write to me about keying in tamil to my email : kuppuraaj2002@yahoo.com.

With best wishes for your efforts
to bring nice blogs.

R. Kuppuraj

said...

மண்டபசாலை யில இருந்து வளநாடு ரத்தினா வுல கெளம்பி வெரசா வாரனப்பு!

Anonymous said...

சரா.. அருமையான பயணக்கட்டுரை. உன் கையை பிடித்துக்கொண்டு கிராமத்தை சுற்றிபார்த்த அனுபவம்.
நீ குறிப்பிட்டதை போல நிச்சயம் அப்பொழுது இருந்த சூட்டை தனிக்க இந்த கட்டுரை ஓரளவு உதவியிருக்கும் என்பது நிச்சயம்.

இந்த வரிசையில் மேற்கொண்டு எதுவும் எழுதினாயா? இல்லையெனில் தொடரவும்.

//ஒவ்வொரு வீட்டிலும் , பல சோகங்கள், சில சந்தோசங்கள், காதல்கள், ஓடிப் போன காதல், கள்ளக் காதல்,எல்லாம் உண்டு, இது எல்லாருக்குமே தெரியும், ஒரு வீட்டுல ஒன்னு நடந்துச்சுனா அது எல்லாருக்குமே ஒடனே தெருஞ்சுடும்,ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கருவாச்சி காவியம் எழுதுற அளவுக்கு கத இருக்கும்,ஒவ்வொரு கதையிலும் பலக் கிளைக் கதைகள் வேறு,//

தேர்ந்த எழுத்தாளனின் வரிகள் போல் உள்ளது.


//அடாடா...அதெல்லாம் "உண்மையாகவே"வாழ்ந்த காலங்கள்//

உண்மை.. ஆனால் அதன் அருமை புரிந்தாலும் அதனை விட்டு தள்ளியே இருக்கவேண்டிய கட்டாயத்தை நமக்கு நாமே உண்டுபண்ணிக் கொண்டுவிட்டோம்.. என்னாத்த சொல்ல..:(((((

said...

//delphine said...
wonderful writing. Thanks and enjoyed..
//

நன்றி டாக்டர்

said...

//புவனேசபாண்டியன் said...
மண்டபசாலை யில இருந்து வளநாடு ரத்தினா வுல கெளம்பி வெரசா வாரனப்பு!
//

வாப்பூ பாண்டியா! ரத்தினா பஸ் காத்திருக்கு எப்போ வேணுமானாலும் வரலாம் நண்பரே

said...

//Anonymous said...
சரா.. அருமையான பயணக்கட்டுரை. உன் கையை பிடித்துக்கொண்டு கிராமத்தை சுற்றிபார்த்த அனுபவம்.
நீ குறிப்பிட்டதை போல நிச்சயம் அப்பொழுது இருந்த சூட்டை தனிக்க இந்த கட்டுரை ஓரளவு உதவியிருக்கும் என்பது நிச்சயம்.

//

ஆமாம் மனதின் ஓசையாரே! அந்த சமயத்தில் எந்தவிதமான குழுவித்தியாசமும் இன்றி அனைத்து நண்பர்களும் வந்து சுற்றிப் பார்த்துசந்தோஷப்பட்டனர்!

//தேர்ந்த எழுத்தாளனின் வரிகள் போல் உள்ளது//
மண்டபத்தில் யாரும் எழுதியதை கொண்டுவந்து போடலை நானே எழுதியவைதான், பாராட்டுதல்களுக்கு நன்றி!

//உண்மை.. ஆனால் அதன் அருமை புரிந்தாலும் அதனை விட்டு தள்ளியே இருக்கவேண்டிய கட்டாயத்தை நமக்கு நாமே உண்டுபண்ணிக் கொண்டுவிட்டோம்.. என்னாத்த சொல்ல..:(((((
//

ஏற்றுக் கொள்ளக் கூடிய உண்மை!

அன்புடன்...
சரவணன்.

said...

உங்கள் நண்பன்,
இப்போ தான் இந்த பதிவை பார்க்கிறேன் .அழகிய பாண்டி புரம் உண்மையிலேயே அழகான ஊர் .நான் வந்திருக்கிறேன் .என் அப்பாவின் சொந்த ஊர் பக்கத்தில் திட்டுவிளை தான்.

said...

சரவணன். ரொம்ப நாளா இந்த இடுகையைப் படிக்கணும்ன்னு குறிச்சு வச்சிக்கிட்டு இன்னைக்குத் தான் படிச்சேன். அருமையா எழுதியிருக்கீங்க. உங்க ஊரைப் பத்தி நல்ல அறிமுகம். சிவபுராணம் சிவான்னு ஒருத்தர் போன வருடம் வரை எழுதிக் கொண்டிருந்தார். அவரை நினைவுபடுத்திவிட்டது உங்கள் எழுத்து. நல்ல வட்டார வழக்கு நடை. :-)

said...

// ஜோ / Joe said...
உங்கள் நண்பன்,
இப்போ தான் இந்த பதிவை பார்க்கிறேன் .அழகிய பாண்டி புரம் உண்மையிலேயே அழகான ஊர் .நான் வந்திருக்கிறேன் .என் அப்பாவின் சொந்த ஊர் பக்கத்தில் திட்டுவிளை தான்.
//

நமது கம்பனியில் மார்க்கெட்டிங்கில் பணிபுரியும் நண்பரும் அதே அழகியபாண்டியபுரம் தான், அவர் வீட்டிற்க்கு அடிக்கடி சென்றுள்ளதால் நன்கு அறிவேன். பெயருக்கேற்றார்ப்போல் உண்மையாகவே அழகிய ஊர். திட்டுவிளையும் எனக்குப் பரிச்சயமான ஊர் தான்.


அன்புடன்...
சரவணன்.

said...

//குமரன் (Kumaran) said...
சரவணன். ரொம்ப நாளா இந்த இடுகையைப் படிக்கணும்ன்னு குறிச்சு வச்சிக்கிட்டு இன்னைக்குத் தான் படிச்சேன். அருமையா எழுதியிருக்கீங்க. உங்க ஊரைப் பத்தி நல்ல அறிமுகம். சிவபுராணம் சிவான்னு ஒருத்தர் போன வருடம் வரை எழுதிக் கொண்டிருந்தார். அவரை நினைவுபடுத்திவிட்டது உங்கள் எழுத்து. நல்ல வட்டார வழக்கு நடை. :-)
//

கிராமம் பற்றிய இந்தப் பதிவைக் குறித்து வைத்து பல மாதங்களுக்குப் பின் மறக்காமல் படித்து பின்னூடமிட்டதற்கு முதலில் நன்றி!

குமரன் உங்களின் எழுத்துக்களைப் படித்திருக்கின்றேன்! நல்ல விசய ஞானத்துடன் விவாதிப்பதையும் பார்த்திருக்கின்றேன்! இந்தப் பதிவு தங்களைக் கவர்ந்தது மிகவும் மகிழ்ச்சி!

சிவபுராணம் சிவாவின் எழுத்துக்களைப் படித்ததில்லை! நிச்சயம் நன்றாக எழுத முயலுவேன்!

முழுவதுமே கிராமத்தைப் பற்றி (மா.சி யும் வற்புறுத்தினார்)அதாவது அங்குள்ள மக்கள்களின் பழக்கவழக்கம், சொல்லப்படும் கதைகள்,விவசாய முறை இவைகளைப் பற்றி எழுதவேண்டுமென்று ரெம்ப நாள் ஆசை அதற்காக ஒரு பதிவையும் தயார்ப் படுத்தி விட்டேன்http://villagepages.blogspot.com/ நிச்சயம் அதில் பல நல்ல பதிவுகளை எழுதும் ஆசையில் உள்ளேன், நடக்கும் என்று நம்புகிறேன்!

அன்புடன்...
சரவணன்.